விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று

விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கு போதாத காலமென்றால் அது 1999 - 2000 ஆவது ஆண்டாகத்தான் இருக்கும். 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, சூதாட்டப் புகார் என்ற கறையும் இந்திய கிரிக்கெட் அணி மீது வீழ்ந்தது. அஸாருதின், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா என பல முக்கிய வீரர்கள் இதில் சிக்கினர். அப்போது இந்திய அணி தள்ளாடிக் கொண்டிருந்தது, அப்போதுதான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அப்போது அவரால் இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டுவரப்பட்ட இருவர் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஜொலித்தனர். அந்த இருவர்கள் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும்.

2000 ஆம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களமிறக்கப்பட்டார். அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 19 வயதான யுவராஜ் சிங் ஆடியது ருத்ர தாண்டவம். யுவராஜ் சிங் பேட்டிங் மட்டுமல்லாமல், இடக்கை சுழற்பந்து வீச்சாளும் கூட. இந்திய அணிக்கு யுவராஜ் சிங் வந்த பின்புதான், பீல்டிங்கில் ஒரு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. அப்படிப்பட்ட யுவராஜ் சிங் பல சாதனைகளுக்கு சொந்தக்காரணானது, இந்திய கிரிக்கெட் அணியின் வரலாறாக பின்னாளில் மாறியது.

ஸ்டைலான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்து, பினிஷராக பல போட்டிகளை வென்று கொடுத்தது, இரண்டு உலகக்கோப்பைகளை இந்தியா வெல்ல காரணமாக இருந்தது என பல காரணங்களுக்காக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் யுவராஜ் சிங். ஆனால், இது எல்லாம் போதாது என புற்றுநோய்க்கு எதிராகவும் ஒரு போராட்டம் நடத்தி அதிலிருந்து மீண்டு வந்து விளையாடி, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகவும் மாறினார் யூவராஜ் சிங். 2007-ஆம் ஆண்டு இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற தோனிக்கே சீனியர் வீரராக இருந்தவர்தான் யுவராஜ். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அப்போது ஈர்த்தார் யுவி.

2011 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக சச்சின் ஒரு பக்கம் ரன் மழையை பொழிந்து வந்தாலும், 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி பல போட்டிகளில் அதிரடி காட்டினார் யுவராஜ். ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் அந்த உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சிலும் அசத்தினார். மிக முக்கியமாக பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் யுவராஜ் எடுத்த விக்கெட்டுகள் மிக முக்கியமானவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பே புற்றுநோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டார் யுவராஜ். ஆனாலும், அதையெல்லாம் பொறுப்படுத்தாமல் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என விளையாடியவர் யுவராஜ்.

இந்த விஷயங்கள் பின்நாளில் தெரிய வர, யுவராஜை உச்சி முகர்ந்து கொண்டாடினர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஆம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை அத்தகைய சாதனை நாயகனான பஞ்சாப் "சிங்கம்" யுவராஜூக்கு இன்று பிறந்தநாள். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com