இந்தியா ஐசிசி கோப்பைகளை பலமுறை வென்றுள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு பெற்ற ஒருநாள் உலகக்கோப்பையானது அனைத்து இந்திய ரசிகர்களாலும் இன்று மட்டுமல்ல, எப்போதும் கொண்டாடக்கூடிய ஒரு உலகக்கோப்பையாக தான் இருக்கும் என்றால் அதனை மிகையல்ல. ஏனென்றால் கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர் என உலக கிரிக்கெட் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எக் காலத்திற்கும் சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது எட்டாக் கனியாகவே இருந்துவந்தது. அதுதான் சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பையாக இருந்தது. அதை வெற்றிபெறவில்லை என்றால், கிரிக்கெட் உலகில் பல இமாலய சாதனைகளை படைத்த ஒரு வீரனுக்கு பெரிய குறையாகவே வாழ்நாள் முழுவதும் வடுவாகவே இருந்திருக்கும். உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை ஒரு மகுடத்தில் கொண்டு சேர்த்த சச்சினின் தலையில் உலகக்கோப்பை என்னும் மகுடத்தை சூட்டவேண்டிய பொறுப்பு உலகக்கோப்பை அணியில் இருந்த ஒவ்வொரு வீரருக்கும் அதிகமாகவே இருந்தது.
இக்காரணத்தினால் தான் சச்சினுக்காக இந்த உலகக்கோப்பையை வெல்லுவோம் என அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தங்கள் அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர். ஒருபுறம் சச்சினுக்காக உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று இந்திய அணியினர் கூற, மறுபுறம் கடைசி உலகக்கோப்பையை ஆடிய ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனுக்காக கோப்பையை வெல்ல வேண்டிய இடத்தில் இலங்கை அணியினர் களம் கண்டனர்.
இலங்கை மற்றும் இந்திய அணிகள் தான் பங்குபெற்ற உலகக்கோப்பை அணிகளில் வலுவான அணியாக தொடக்கத்திலேயே பார்க்கப்பட்டது. பல தலைசிறந்த வீரர்கள் நிரம்பி இருந்த இரண்டு தரமான கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தரமான ஒரு உலகக்கோப்பை போட்டி நடந்தேறியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஜெயவர்தனேவின் அற்புதமான சதத்தால் 274 ரன்களை குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்கை துறத்திய இந்திய அணிக்கு வீசிய 2ஆவது பந்திலேயே அதிரடி வீரர் சேவாக்கை டக் அவுட்டில் வெளியேற்றி, இது எளிதான இலக்கு இல்லை என இந்திய அணியை பயமுறுத்தினார் லசித் மலிங்கா. என்னதான் சேவாக் வெளியேறினாலும் தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சச்சின் ஆட்டத்தை எடுத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பந்துவீச வந்த லசித் மலிங்கா சச்சினை வெளியேற்ற மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மட்டுமல்லாமல், டிவியின் முன் அமர்ந்திருந்த அனைத்து இந்திய ரசிகரின் தலைமீதும் இடி விழுந்தது. நிறைய பேர் டி.வி.யை ஆப் செய்து விட்டு வேலையை பார்க்கத்தொடங்கினர்.
ஆனால், அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காம்பீர் மற்றும் கோலி ஜோடி பொறுமையுடன் ரன்களை எடுக்க டி.வி.யை ஆப் செய்தவர்கள் கொஞ்ச நேரம் பாக்கலாம் என ஆன் செய்தார்கள். கோலி 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும் காம்பீரின் பொறுப்பான ஆட்டம் அனைவருக்கும் நம்பிக்கை தந்தது. கோலிக்கு பின்னர் யுவராஜ் சிங் தான் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக களத்திற்குள் வந்தார் தோனி.
எதற்காக தோனி வந்தார், தொடர் முழுவதும் யுவராஜ் சிங் சிறப்பாகவே பேட்டிங் செய்திருந்தார் என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் தோன்றினாலும், அதெல்லாம் யோசிக்காதீர்கள் என்னுடைய ஆட்டத்தை மட்டும் பாருங்கள் என அன்று தோனி ஆடிய ஆட்டம் இன்று வரை நம் மனக் கண்களை விட்டு அகலாமல் வந்து செல்லும். அன்று கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தாலும், இந்தியா வெற்றி இலக்கின் அருகில் வந்தது. கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், யுவராஜ் சிங் ஒரு ரன் எடுப்பார்.
பின்னர் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை எனும் போது தோனி அடித்த அந்த சிக்ஸ்!... ஆம். உங்கள் கண்ணில் காட்சிகளாய் விரியும் அதே சிக்ஸர் தான்.. குலசேகரா ஓவரில் தோனி "லாங் ஆன்" திசையில் அடித்த வரலாற்று சிக்ஸரில் இந்தியா 28 வருடங்கள் கழித்து வெற்றிப் பெற்று கோப்பையை கையில் ஏந்தியது. “Dhoni finishes off in style, A magnificent strike into the crowd, India lifts the World Cup after 28 years" என அதிர்ந்த ரவி சாஸ்திரியின் குரலோடு ஸ்டம்புகளை பிடிங்கி கொண்டு ஓடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் ததும்பியிருந்தது. "சச்சினுக்காக இந்த உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோல் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். அந்த காட்சி இன்றும் ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களிலும் வந்து நிற்கும்.
இந்நிலையில் தான் 2011 உலகக்கோப்பை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற உலகக்கோப்பை கேப்டனான தோனி, 2011 உலகக்கோப்பையை வென்ற தருணம் பற்றி பேசியுள்ளார். கோப்பையை வென்ற தருணம் எப்படியிருந்தது என்ற கேள்விக்கு பேசியிருக்கும் தோனி, “ உலக கோப்பை வெற்றி பெற்ற தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது மனதிற்கு நிறைவான உணர்வை தந்த தருணம் அது. இலக்கு இன்னும் சிறிது தூரத்தில் தான் இருக்கிறது, போட்டியை வெற்றி பெறுவதற்கு ரன்கள் குறைவாகவே இருந்தாலும் பதட்டமான அந்த சூழ்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ‘வந்தே மாதரம்’ என பாட ஆரம்பித்தனர்.
தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் பாடிக்கொண்டே இருந்தனர். அந்த 20 நிமிடங்கள் களத்தில் இருக்கும் எனக்குள் ஏதோ ஒன்றை இனம்புரியாத மகிழ்ச்சிக்குள் தள்ளியது. மிகவும் மகிழ்சியாக இருந்தது, உலக கோப்பையை பெற்ற தருணத்தை விட அந்த 20 நிமிடங்கள் நினைவில் தற்போதும் உள்ளது” என்று தோனி தெரிவித்துள்ளார்.