இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1 - 1 என இந்தத் தொடர் சமநிலையில் உள்ளது. கடைசியாக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களை விடாமல் துரத்தி வருகிறது காயம்.
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தொடரிலிருந்து விலகினார். முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி காயம் பட்டதால் விலகினார். இரண்டாவது டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகினார். சிட்னி போட்டியில் விளையாடிய ஜடேஜா, விஹாரி மற்றும் பும்ராவும் இப்போது விலகி உள்ளனர். இதனால் எஞ்சியுள்ள வீரர்களை மட்டுமே வைத்து நான்காவது டெஸ்டில் விளையாடவேண்டிய சோதனையை எதிர்கொண்டுள்ளது இந்தியா.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளார் ஷேவாக். “இத்தனை வீரர்கள் காயத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளனர். அடுத்த போட்டிக்கு இந்திய அணியில் விளையாட வேண்டிய 11 வீரர்களை தேர்வு செய்ய சிக்கல் இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க நான் தயார். அதற்காக எனது ஓய்வு முடிவிலிருந்து கூட பின்வாங்கி கொள்வேன். கொரோனா அச்சுறுத்தலினால் தனிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளதை எல்லாம் பாத்துக்கலாம்” என ஷேவாக் தெரிவித்துள்ளார்.