இந்திய கிரிக்கெட் அணியில் 1960களில் அதிரடி கிரிக்கெட் வீரராக கலக்கியவர் தான் சலீம் துரானி. திரைப்பட நடிகரை போன்ற தோற்றம், அதிக நகைச்சுவை உணர்வு, தேவைக்கேற்ப அசுரத்தனமான சிக்ஸர்களை அடிக்கும் வீரராக ஜொலித்த சலீம் குரானி, தனது இளைய சகோதரர் ஜஹாங்கீர் துராணியுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஜனவரி தொடக்கதில் கீழே விழுந்ததில் அவருக்கு தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அவர் இன்று இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினரால் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காபூலில் பிறந்த துரானி, இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாகவும், இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளராகவும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1961-62 இல் ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என வெற்றிபெற முக்கிய வீரராக செயல்பட்டார். வெற்றிபெற்ற 2 போட்டிகளான கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் 8, 10 என மொத்தமாக 18 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஒட்டுமொத்தமாக 50 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அவர், 7 அரைசதங்களோடு 1,202 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் முதலில் கிரிக்கெட் வீரருக்கான அர்ஜூனா விருது இவருக்கு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்த சலீம் துரானிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரவி சாஸ்திரி - "இந்தியாவின் மிகவும் வண்ணமயமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தவர் சலீம் துரானி. ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி" என்று ட்வீட் செய்துள்ளார்.
விவிஎஸ் லஷ்மண் - "இந்தியாவின் முதல் அர்ஜுனா விருது பெற்ற கிரிக்கெட் வீரர், ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்காக சிக்ஸர் அடித்தவர் சலீம் துரானி. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.
முகமது அசாருதின் - ”இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சோகமான நாள். சிறந்த ஜாம்பவான் வீரரான சலீம் துரானி சாரை இழந்துவிட்டோம். என் சிறுவயதில் அவர் விளையாடுவதை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹர்சா போக்ளே - எல்லோரையும் கவனம் ஈர்க்கக்கூடிய, பெரிய மனதுடன் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய சலீம் துரானி இப்போது நம்மிடையே இல்லை. இளைய தலைமுறையினர் அவரைப் பற்றிய பல கதைகளைக் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
கிரிக்கெட் விளையாடும் போது களத்திலிருக்கும் அவரிடம் ரசிகர்கள் சிக்சர் கேட்டால், உடனே சிக்சர் அடித்து அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தும் அதிரடி வீரராக பெயர் போன சலீம் துரானி, 1973ஆம் ஆண்டு பாலிவுட்டில் சரித்ரா என்ற திரைப்படத்தில் பிரபல நடிகர் பிரவீன் பாபியுடன் நடித்துள்ளார்.