இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அனுபவ விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் விருத்திமான் சாஹா. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து கங்குலி தனக்கு ஆதரவளித்த போதும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை நீக்கிவிட்டதாக பகிரங்கமாக பொது வெளியில் சொல்லியிருந்தார் சாஹா.
அவரது பேச்சு அதிர்வலைகளை எழுப்பியிருந்தது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான சந்திரகாந்த் பண்டிட், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
“அணியில் இடம் பெறுவது குறித்து டிராவிட், சாஹாவிடம் வெளிப்படையாக பேசியதில் எந்த குற்றமும் இல்லை. பயிற்சியாளரின் திட்டம் என்ன? அணியின் திட்டம் என்ன? என்பதை ஒரு வீரருக்கு சொல்லி புரிய வைப்பதில் என்ன தவறு உள்ளது. அதனால் தான் டிராவிட் இதனை செய்துள்ளார். அவ்வளவு தான்” என சொல்லியுள்ளார் சந்திரகாந்த் பண்டிட்.
சாஹாவிடம் டிராவிட் அப்படி என்ன சொன்னார்?
“நான் யாரையும் காயப்படுத்துபவன் இல்லை. இந்திய கிரிக்கெட்டுக்காக சாஹா வெளிப்படுத்திய அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன். அவர் மீது மரியாதை வைத்திருந்த காரணத்தால் அணியில் இடம் பெறுவது குறித்து வெளிப்படையாக அவரிடம் சொன்னேன். அணியில் இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து அவரிடம் உரையாடினேன். பண்ட் முதல் சாய்ஸாக விளையாடி வருகிறார். அவர் இல்லாத சமயங்களில் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் தேவைபடுகிறார் என்பதை மட்டும்தான் நான் தெரிவித்தேன். அது அணியின் பார்வையும் கூட என சொல்லியிருந்தேன்” என தங்களுக்குள் நடந்த உரையாடல் குறித்து ராகுல் டிராவிட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார்.