வரும் 7 ஆம் தேதி அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக அண்மையில் பிசிசிஐ நடராஜனை டெஸ்ட் அணியில் சேர்த்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்துவீச்சாளரான ருத்ர பிரதாப் சிங் (ஆர்.பி சிங்) நடராஜனை புகழ்ந்துள்ளார். அதனை சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் அவர் பகிர்ந்துள்ளார். “நடராஜனின் கதையை எழுதுபவர் யார்? அவரது கதையை விட ஒரு சிறப்பான நம்பிக்கை கொடுக்கும் கதையை என்னால் நினைவு கூற முடியவில்லை. வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இணைந்தவர் வெள்ளை பந்து கிரிக்கெட் வீரராக உருவானார். இப்போது சிகப்பு நிற பந்தில் பந்து வீச உள்ளார். அவரது அசத்தலான ஐபிஎல் ஃபார்ம் தொடரட்டும். சிறப்பான நல்லதொரு தொடக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. சம நிலையில் உள்ள இந்த தொடரில் நடராஜனின் வருகை இந்திய அணிக்கு பலமாக அமையும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.