இந்திய அணியின் முன்னாள் U19 கிரிக்கெட் வீரர் சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(47). இந்திய யு19 கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர். 1990 சீசனில் நியூசிலாந்திற்கு எதிரான யு 19 இந்திய அணியில் முதன்முதலில் கேரளாவில் இருந்து சென்றவர். அப்போது இளம் வீரராக இருந்த ராகுல் ட்ராவிட் யு 19 இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
1994-95 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு எதிரான முதல் ரஞ்சி போட்டியில் கேரளாவின் வெற்றியில் சுரேஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். தொடரில் 164 ரன்கள் எடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.1995-96 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் சுரேஷ்குமார் ஆலப்புழாவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.