பரபரப்பான கடைசி ஓவரில் சஞ்சு சாம்சன் 'சிங்கிள்' தர மறுத்தது சர்ச்சையாகி உள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நேற்று சஞ்சு சாம்சன் கடைசி வரை போராடி 119 ரன்கள் எடுத்தும் கூட ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் சஞ்சு சாம்சன். இதனால் கடைசி இரு பந்துகளில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது அர்ஷ்தீப் வீசிய பந்தை லாங் ஆஃப் பகுதியில் அடித்தார் சஞ்சு சாம்சன். ஒரு ரன் தான் கிடைக்கும் என்பதால் சிங்கிள் ரன்னை ஓட மறுத்து விட்டார். இதனால் மறுமுனையில் இருந்து ஓடோடி வந்த கிறிஸ் மோரிஸ் மீண்டும் திரும்பிச் சென்றார். தன்னால் ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார் சஞ்சு சாம்சன். அதனால் அவர் அந்த சிங்கிளை மறுத்து கடைசிப் பந்தை எதிர்கொள்ளத் தயாரானார். ஆனால் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி ஸ்டிரைக் கொடுக்காமல் போனது தவறு என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் செய்தது சரிதான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறுகையில், ''சஞ்சு சாம்சன்தான் நீண்ட நேரம் களத்தில் இருந்தார். அவருக்குத்தான் பந்து எப்படி வரும் என்று தெரியும். கிறிஸ் மோரிஸ் அப்போதுதான் வந்தார். அவர் முதலில் ஆடிய பந்துகளில் பெரிதாக அடிக்கவில்லை. இதனால் சஞ்சு ஸ்டிரைக் எடுத்தது சரியே. அதோடு சஞ்சு அந்த ஓவரில்தான் சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் கடைசி பாலிலும் கிட்டத்தட்ட சிக்ஸ் அடித்துவிட்டார். பந்து மெதுவாக வந்ததால் எல்லைக்கோட்டை தாண்ட முடியவில்லை’’ என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனரான குமார் சங்ககாரா கூறுகையில், “சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு சரியானதே. நூலிழையில்தான் அவரது சிக்சர் தவறியது. ஒரு வீரர் களத்தில் ஃபார்மில் இருக்கும்போது கடினமான தருணத்தை தன்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழும். சஞ்சு சாம்சனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கைக்கும் துணிச்சலுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அவரது பாசிட்டிவான அணுகுமுறை அணிக்கு மிகவும் முக்கியமானது. அடுத்த முறை, ஆட்டத்தை வெல்ல சஞ்சு சாம்சன் பேருதவியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.