ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஹானேவை மனதார பாராட்டி தள்ளியுள்ளார். கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர் ரஹானே எனவும், அதற்கான துணிச்சலும், திறனும் அவரிடம் இருப்பதாகவும் சேப்பல் தெரிவித்துள்ளார்.
ரஹானே கேப்டனாக இந்திய அணியை கடந்த 2017 இல் தர்மசாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வழிநடத்தினார். அந்த போட்டியையும் மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட்டையும் ஒப்பிட்டு பேசியுள்ளார் சேப்பல்.
“2017இல் அவர் அணியை வழிநடத்தியதை பார்த்திருந்தால் இது புரியும். அவர் கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர். அண்மையில் முடிந்த டெஸ்ட் போட்டிக்கும், 2017-டெஸ்ட் போட்டிக்கும் நிறைய விஷயங்கள் ஒருமித்து போகின்றன. இரண்டு போட்டிகளிலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜாவின் பங்கு அதிகம் இருப்பதை கவனிக்க வேண்டும். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளது. அதேபோல இரண்டு போட்டிகளிலும் பலமான பார்ட்னர்ஷிப்பை உடைக்க அறிமுக வீரரை பந்துவீச செய்வது என அவர் மாஸ் காட்டுகிறார். தலைமை பண்புக்கே உரிய குணத்துடன் அணியை வழிநடத்தி செல்லும் அவர் துணிச்சல் மிக்கவர். சாந்தமான அணுகுமுறையில் அணியை ஒருங்கிணைத்து தங்களது ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துபவர்” என ரஹானேவை சேப்பல் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.