சமீபகாலமாக முன்னாள் கேப்டன் விராட் கோலியின், பேட்டிங் ஃபார்ம் குறித்து மீண்டும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றுள்ளன. 4வது போட்டி, வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து மீண்டும் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர், கடந்த 3 போட்டிகளில் 12, 44-20, 22-13 என மொத்தம் 111 ரன்களே எடுத்துள்ளார். ஓர் அரைசதமோ அல்லது சதமோ எடுக்கவில்லை. இதனால் அவருடைய பேட்டிங் ஃபார்ம் மீண்டும் விமரசனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “இந்தத் தொடர், பேட்டகளுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. அதனால், நான் எந்த பேட்டர்களின் திறன் குறித்தும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆடுகளம் பேட்டர்களை மிகவும் சோதிக்கிறது. எனினும், முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா, 3வது போட்டியில் வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபடுகிறது.
இதன்மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். இந்த சூழல் நீடித்தால், உங்களால் பேட்டிங் செய்ய முடியாது. நான், விராட் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலி ரன் எடுப்பதில் சிரமப்படலாம். ஆனால் ஒரு பேட்டராக, நீங்கள் தடுமாறும்போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி திறன் குறித்து கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்