ஐபிஎல்: காணாமல் போன முன்னாள் ஹீரோஸ்!

ஐபிஎல்: காணாமல் போன முன்னாள் ஹீரோஸ்!
ஐபிஎல்: காணாமல் போன முன்னாள் ஹீரோஸ்!
Published on

வரும் 7-ம் தேதி தொடங்க இருக்கிறது ஐபிஎல் திருவிழா. அனைத்து அணிகளும் கோப்பையை குறிவைத்து கோதாவில் குதித்துவிட்டன. ‘இந்த வருடம் எனக்குத்தான் கோப்பை’ என பெங்களூர் அணியின் விராத்தும், இரண்டு வருடம் ஆடாத குறையை போக்க, ’கோப்பையை கைப்பற்றியே தீரணும்’ என தோனி டீமும், ‘நாங்க கோப்பை தக்க வைக்கணும்’ என மும்பையும் மல்லுகட்டுகின்றன.

இதற்கிடையே மற்ற அணிகளும் ’நாங்களும் இருக்கோம் பாஸ்’ என்று சவுண்ட் விடுகின்றன. இதற்கிடையே இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் கலக்கிய பல வீரர்களை இப்போது காணவில்லை. ’இவர்லாம் சூப்பரா வருவாப்ல’ என்று நினைத்த பலர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

அவர்களில் சிலரை பற்றி இங்கே:

ஜோகிந்தர் சர்மா (joginder sharma):

அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இவரை. 2007 உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். அந்த கடைசி ஓவரில் பாகிஸ்தானின் மிஸ்பாவின் விக்கெட்டை தூக்கி, மிரள வைத்த இந்த ஜோகிந்தர் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸில் செல்லப்பிள்ளையாக இருந்தவர், ஆரம்பக் கட்டத்தில். அடுத்து தொழிலை மாற்றி ஹரியானா டிஸ்பி ஆகிவிட்டார். இருந்தும் 2016-ல் புனே அணிக்காக ஏலத்தில் எடுத்தார்கள் இவரை. சோபிக்கவில்லை சர்மா. கடந்த ஆண்டு ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. தனது போலீஸ் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சவுரவ் திவாரி (Sourav Tiwary):
இந்த ஜார்கண்ட் வீரர், 2010-ல் மும்பைக்காக ஆடினார். அந்த தொடரில் மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான். அடுத்த சீசனில் இவரை ஏலத்தில் எடுக்க ஏகப்பட்ட போட்டி. பெங்களூர் அணி 7.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது இவரை. ஆனால், சோபிக்கவில்லை திவாரி. பிறகு அங்கிருந்து டெல்லி சென்றார். அங்கும் சரியாக விளையாடாததால், கவனிக்கப்படவில்லை. ஐபிஎல்-லில் 63 போட்டிகளில் விளையாடி 945 ரன்களை குவித்திருக்கிறார் இந்த திவாரி.

பால் வல்தட்டி (Paul Valthaty):
பஞ்சாப்புக்காக ஆடிய பால் வல்தட்டி, 2011-ல் சென்னைக்கு எதிராக விளாசிய அதிரடி சதம்தான் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்த ஐபிஎல் தொடரிலும் ஆல் ரவுண்டராக அசத்தினார் பால். ஆனால் அதற்கடுத்த தொடரில் இருந்து அவரை கண்டுகொள்ளவில்லை யாரும். அதற்கு அவரது மோசமான ஃபார்மும் காரணம்.

டக் போலிங்கர் (Doug Bollinger): 
ஆஸ்திரேலிய வீரர். 2010-2012- வரை போலிங்கர் ராஜ்யம்தான் சென்னை சூப்பர் கிங்ஸில். இரண்டு முறை சிஎஸ்கே, கோப்பையை வெல்ல, போலிங்கரின் பந்துவீச்சுக்கும் பங்கு உண்டு. 27 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அடுத்தடுத்தப் போட்டிகளில் எந்த அணியும் போலிங்கரை கண்டுகொள்ளவில்லை. 

முனாஃப் படேல் (Munaf Patel):
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரர். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதலில் ஆடியவர், பிறகு மும்பை இண்டியன்ஸ் அணிக்குச் சென்றார். 61 போட்டிகளில் 73 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரை, அடுத்தடுத்தப் போட்டிகளில் அணிகள் கைவிட்டுவிட்டன. கடந்த வருடம் குஜராத் அணிக்கு மீண்டும் வந்தார். இந்த வருடம் எந்த அணியிலும் அவர் இல்லை.

ஆர்.பி.சிங் (RP Singh):
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய சிங், 2009-ல் அந்த அணி கோப்பையை வெல்ல உதவியவர். அதற்கடுத்த வருடமும் அதே அணியில் ஜொலித்த சிங், அங்கிருந்து மும்பைக்கும் பெங்களூர் அணிக்கும் சென்று வந்தார். நிரூபிக்கவில்லை தன்னை. ஓரங்கட்டப்பட்டார்.

வேணுகோபால் ராவ் (Venugopal Rao)
ஐதராபாத்தை சேர்ந்த இந்த ராவ், அதிரடி பேட்ஸ்மேன். 2008-ல் டெக்கான் சார்ஜருக்காக முதலில் களமிறங்கிய ராவ், 11 போட்டிகளில் 288 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவுக்கு எதிராக 42 பந்தில் 71 ரன்கள் விளாசி அவர் அணியை வெற்றி பெற வைத்த சாதனையெல்லாம் பழசாகிவிட்டது. அடுத்து ஃபார்மில் இல்லாததால், ஓரங்கப்பட்டார். 

சித்தார்த் திரிவேதி (Siddharth Trivedi):
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-ல் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர். குஜராத்தை சேர்ந்த இந்த சித்தார்த்தை, கேப்டன் ஷேன் வார்ன் புகழ்ந்து தள்ளினார். முக்கியமான வீரராக வருவார் என்று கணித்தார். அவர் கணிப்பில் தவறில் லைதான். ஆனால் விதி வேறுவிதமான விளையாட்டை நடத்தியது. 2013-ல் நடந்த ஐபில் தொடரில் மேட்ச் பிக்சிங் புகாரில்  சிக்கினார். அதோடு முடிந்தது அவரது பயணம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com