ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தி வரும் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் முதல் முறையாக கள நடுவராகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை அந்த கூட்டமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்தது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 36 வயது பெண் கால்பந்தாட்ட கள நடுவரான ஸ்டெபானி ஃப்ராப்பார்ட் தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கள நடுவராக செயல்பட உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஃபிபாவின் சர்வதேச கள நடுவர்கள் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார் இவர்.
மகளிர் கால்பந்தாட்டங்களில் கள நடுவராக அசத்தி வந்த ஸ்டெபானி கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற மகளிர் கால்பந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல பல ஹை புரொபைல் ஆட்டங்களிலும் கள நடுவராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற லிவர்பூல் மற்றும் செல்ஸே அணிகளுக்கு இடையிலான UEFA சூப்பர் கப் இறுதி ஆட்டத்திலும் கள நடுவராக இவர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் முதல்முறையாக ஜுவென்டஸ் மற்றும் டைனோமோ கீவ் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஸ்டெபானி கள நடுவராக பணியாற்ற உள்ளார்.