தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக்... கோப்பை வெல்ல எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்?

குரூப் சுற்றோரு சாம்பியன்ஸ் லீக் நடக்கப்போவது இதுவே கடைசி முறை. இந்த சீசனை வெல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம்?
champions league
champions leaguerepresentative image
Published on

கிளப் கால்பந்தின் மிகப் பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீகின் புதிய சீசன் செவ்வாய்கிழமை இரவு தொடங்குகிறது. பல அசத்தல் குரூப்கள் இடம்பெற்றிருக்கும் இந்த சீசனில் பல பரபரப்பான போட்டிகள் முதல் சுற்றிலேயே நடக்கப்போகின்றன. இத்தனை காலம் 32 அணிகளோடு ஆடப்பட்டுவந்த இந்தத் தொடர் அடுத்த சீசன் முதல் 36 அணிகளோடு நடக்கும். இந்த குரூப் ஃபார்மட்டும் கூட மாற்றப்படும். ஆக, குரூப் சுற்றோரு சாம்பியன்ஸ் லீக் நடக்கப்போவது இதுவே கடைசி முறை. இந்த சீசனை வெல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம்?

மான்செஸ்டர் சிட்டி

ஒருவழியாக இந்தக் கோப்பையை கடந்த சீசன் வென்றுவிட்ட மான்செஸ்டர் சிட்டி, இம்முறையும் கோப்பையைக் கைப்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. கார்டியோலாவின் அணியைப் போல் எந்த டீமுமே கடந்த 12 மாதங்களில் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ரியாத் மாரஸ், இல்கே குண்டோகன், ஆய்மரிக் லபோர்ட் போன்ற வீரர்கள் வெளியேறியிருந்தாலும், ஜாஸ்கோ குவார்டியோல், மாத்தியஸ் நூனஸ், ஜெரமி டொகு, மடியோ கோவசிச் போன்ற வீரர்களை வாங்கி ஸ்குவாடை பலப்படுத்தியிருக்கிறது அந்த அணி. சாம்பியன்ஸ் லீக் போன்ற ஒரு தொடரை வெல்ல திடமான டிஃபன்ஸ் தான் அதிமுக்கியம். அது மான்செஸ்டர் சிட்டி அணியிடம் இருக்கிறது. கெவின் டி புருய்னா தற்போது காயமடைந்திருந்தாலும் யூலியன் ஆல்வரஸ் அந்த இடத்தை சிறப்பாக நிரப்பிக்கொண்டிருக்கிறார். ஹாலண்ட் இன்னும் அதே வெறிபிடித்த கோல் மெஷினாகத் திகழ்கிறார். நிச்சயம் இந்த முறையும் அந்த அணி சாம்பியன் ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.

ரியல் மாட்ரிட்

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே கன்சிஸ்டென்ட்டாக கலக்கிக் கொண்டிருக்கிறது 14 முறை சாம்பியன் ரியல் மாட்ரிட். கடந்த ஆண்டு அசத்தல் ஃபார்மில் இருந்த சிட்டியிடம் தோற்று வெளியேறியது அந்த அணி. இம்முறை நிச்சயம் கார்டியோலாவின் அணிக்கு அவர்களால் சவாலளிக்க முடியும். கரிம் பென்சிமா அணியிலிருந்து வெளியேறியிருந்தாலும், அந்த அணிக்கு கோலுக்கு பஞ்சமில்லை. இந்த சீசன் அணியில் புதிதாக இணைந்த ஜூட் பெல்லிங்கம் அதற்கு இணையாக விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசத்தலாக தொடங்கியிருக்கிறது ரியல். இதில் முதல் 4 போட்டிகளில் 5 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார் பெல்லிங்கம். வழக்கம்போல் மிட்ஃபீல்டை அதிகம் நம்பியிருக்கும் மாட்ரிட்டுக்கு வீரர்களின் காயம் சற்று பின்னடைவாக இருக்கிறது. கோர்வா, வினிசியஸ் ஜூனியர், எடர் மிலிடாவ் ஆகியோர் நாக் அவுட் சுற்று தொடங்கும் நேரத்தில் கம்பேக் கொடுத்துவிட்டால் எல்லாம் நலமே!

பேயர்ன் மூனிச்

கடந்த சில ஆண்டுகள் பேயர்ன் மூனிச் அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திடவில்லை. ஆனால் அடுத்தடுத்த பயிற்சியாளர் மாற்றங்கள், சில சிறப்பான டிரான்ஸ்ஃபர்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் லீக் வெல்வதற்குத் தகுதியான அணியாகத் தெரிகிறது பேயர்ன். இரண்டு சீசன்கள் முன்பு செல்சீயோடு சாம்பியன்ஸ் லீக் வென்ற தாமஸ் டுசெல் தனது ஸ்டைலை கொஞ்சம் கொஞ்சமாக அணிக்குள் புகுத்திக்கொண்டிருக்கிறார். அதைவிட ஹேரி கேனை வாங்கியிருப்பது அந்த அணிக்கு இருந்த நம்பர் 9 பிரச்சனையை சரிசெய்திருக்கிறது. பிரச்சனையை சரிசெய்திருக்கிறது என்பதைவிட அந்த அணியை பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறது என்று சொல்லவேண்டும். வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பல வீரர்கள் இருக்கும் அந்த அணியில், கேன் போன்ற ஒரு உலகத்தர ஸ்டிரைக்கரின் தாக்கமும் நிச்சயம் அதிகரிக்கும். நாக் அவுட் சுற்றுக்கு முன் கோல்கீப்பர் பிரச்சனையை அந்த அணி சரிசெய்தால் நிச்சயம் இன்னொரு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை முத்தமிடலாம்.

இன்டர் மிலன்

கடந்த சீசனில் ஃபைனலுக்கு தகுதி பெற்றதால் இன்டர் மிலனை இந்தப் பட்டியலில் இணைத்துவிடவில்லை. சொல்லப்போனால் கடந்த சீசனை விட இந்த சீசன் இன்னும் பலமாகக் காணப்படுகிறது இன்டர் மிலன். ஒனானா, ஹேண்டனோவிச், லுகாகு போன்ற வீரர்கள் இந்த சீசன் இல்லாவிட்டாலும் அந்த அணியின் செயல்பாடு மேம்பட்டிருக்கிறது. பிரான்ஸின் இளம் ஃபார்வேட் மார்கஸ் தூரம் விரைவிலேயே அந்த அணியில் செட்டில் ஆகிவிட்டார். அவர்களின் நடுகளம் மிகவும் துடிப்பாக செயல்பட்டுவருகிறது. புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் லௌடாரோ மார்டினஸ், இந்த சீசன் தன் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த சீரி ஆ சீசனில் 4 போட்டிகளையும் வென்றிருக்கும் இன்டர், 13 கோல்கள் அடித்துத் தள்ளியிருக்கிறது. ஒரேயொரு கோல் மட்டுமே விட்டிருக்கிறது. அதிமுக்கிய போட்டியாகக் கருதப்பட்ட மிலன் டெர்பியல் ஏசி மிலனை 5-1 என பந்தாடியிருக்கிறது இன்டர். இந்த ஃபார்மை அவர்கள் சீசன் முழுக்க தொடர்ந்தால் நிச்சயம் அவர்களால் சாம்பியன்ஸ் லீகில் வெகுதூரம் செல்ல முடியும்.

இந்த அணிகள் போக ஆர்செனல், நெபோலி, பார்சிலோனா போன்ற அணிகளும் நிச்சயம் காலிறுதி வரை முன்னேறும். அதற்கு மேல் ஏதேனும் அப்செட்களை இந்த அணிகள் நிகழ்த்தினால் அரையிறுதி, இறுதி வரை முன்னேறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com