ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வரும் ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை தொடரில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் அரங்கேறிவருகின்றன. மிகப் பெரிய அணிகளான பிரேசில், ஜெர்மனி, கனடா போன்ற அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, மொராக்கோ போன்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கின்றன.
தொடரின் முதல் போட்டியிலேயே நார்வேவை வீழ்த்தி அதிர்ச்சிகரமான தொடக்கம் கொடுத்தது போட்டியை நடத்தும் நியூசிலாந்து. ஆனால் அடுத்த போட்டியிலேயே பிளிப்பைன்ஸ் அணியிடம் தோற்று தங்கள் நாக் அவுட் வாய்ப்பைப் பறிகொடுத்தது அந்த அணி. இறுதியில் கோல் வித்தியாச அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குதள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நார்வே. ஸ்விட்சர்லாந்து இந்த குரூப்பில் முதலிடம் பிடிக்க, ஃபிளிப்பைன்ஸ் தங்கள் முதல் உலகக் கோப்பையில் ஒரு வெற்றியைப் பதிவு செய்த மகிழ்ச்சியோடு வெளியேறியது.
போட்டியை நடத்தும் மற்றொரு அணியான ஆஸ்திரேலியா எதிர்பார்த்ததைப் போலவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இந்த சுற்றில் முதலிடம் பிடிக்கும் என்று கருதப்பட்ட கனடா, தவறியதால் மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது. ஃபிஃபா தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் கனடா, 40வது இடத்தில் இருக்கும் நைஜீரியாவுக்கு எதிராக முதல் போட்டியை 0-0 என டிரா செய்தது. இருந்தாலும் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்தால் போதும் என்ற நிலையில் இருந்தது கனடா. ஆனால் 4-0 என படுதோல்வி அடைந்தது அந்த அணி. அயர்லாந்து அணி ஒரேயொரு புள்ளியுடன் கடைசி இடம் பிடித்தது
இந்த சுற்றில் பெரிதாக எந்த அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிகழவில்லை. எதிர்பார்த்ததைப் போல் ஸ்பெய்னும் ஜப்பானும் ஜாம்பியாவையும் கோஸ்டா ரிகாவையும் வீழ்த்தி இரண்டு சுற்றுகள் முடிவிலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தன. இருந்தாலும் கடைசி சுற்றில் 4-0 என ஸ்பெய்னை ஜப்பான் வீழ்த்தியது சில புருவங்களை உயர்த்தியது. குரூப் சுற்றில் 11 கோல்கள் அடித்து மிரட்டிய ஜப்பான், ஒரு கோல் கூட விடவில்லை! அவ்வணி வீராங்கனை ஹினாடா மியாசாவா 3 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார்.
மிகவும் கடினமான குரூப் Dயில் இங்கிலாந்து அணி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகளையும் வென்ற அந்த அணி ஒரேயொரு கோல் மட்டுமே விட்டது. ஹைதி அணிக்கெதிரான முதல் போட்டியில் 1-0 என போராடி வென்ற அந்த அணியின் செயல்பாடு அப்போது விமர்சனத்துக்குட்பட்டது. ஆனால் அடுத்த இரு போட்டிகளிலும் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறது ஐரோப்பிய சாம்பியன். மிகமுக்கிய போட்டியில் டென்மார்க் அணி 1-0 என சீனாவை வென்றதால் இரண்டாவது அணியாக அந்தப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஹைதி ஒரு கோல் கூட அடிக்காமல் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
எதிர்பார்த்ததைப் போலவே நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. பலம் வாய்ந்த அந்த அனிகள் மோதிய போட்டி 1-1 என டிரா ஆனது. கடைசிப் போட்டியில் முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் போர்ச்சுகலுக்கு எதிராக அமெரிக்காவால் டிராவே செய்ய முடிந்தது. அதனால் அந்த அணி முதலிடத்தை நெதர்லாந்திடம் இழந்தது. போர்ச்சுகல் உள்பட அனைத்து அணிகளிடமும் தோற்ற வியட்நாம் ஒரு கோல் அடிக்காமல் 12 கோல்கள் வாங்கி ஏமாற்றமடைந்தது.
இந்தப் பிரிவில், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஜமைக்கா அணியின் செயல்பாட்டை ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் கொண்டாடியது. தரவரிசையில் 43வது இடத்தில் இருக்கும் அந்த அணி, தங்கள் முதல் போட்டியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸிடமும், எட்டாவது இடத்திலிருக்கும் பிரேசிலிடமும் 0-0 என டிரா செய்தது. பனாமாவுக்கு எதிரான போட்டியை வென்றதால் அந்த அணி 5 புள்ளிகள் பெற்றது. பிரேசிலை வீழ்த்தியதால் பிரான்ஸ் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 4 புள்ளிகளோடு மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது பிரேசில்.
இந்தப் பிரிவில் தரவரிசையில் 54வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்ற அணிகளுக்கு கிலி ஏற்படுத்தியது. முதல் போட்டியில் 3ம் நிலை அணியான ஸ்வீடனுக்கு எதிராக 90வது நிமிடம் வரை 1-1 என சமநிலையில் இருந்தது அந்த அணி. ஆனால் 90வது நிமிட கோலால் தோல்வியைத் தழுவியது. அடுத்தது 28வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவுக்கு எதிராக 2-2 என டிரா செய்தது அந்த அணி. கடைசிப் போட்டியில் 16ம் நிலை அணியான இத்தாலிக்கு எதிராக ஸ்டாப்பேஜ் டைமில் கோலடித்து வரலாறு படைத்தது. அந்தக் கடைசி நிமிட கோலால் இத்தாலி மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது. 9 புள்ளிகளுடன் இப்பிரிவில் முதலிடம் பெற்றது ஸ்வீடன்
இந்தப் பிரிவிலும் அதிர்ச்சிகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. தரவரிசையில் பின்னால் இருக்கும் கொலம்பியா, மொராக்கோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அதிர்ச்சியளித்தன. இரண்டாம் நிலை அணியான ஜெர்மனி தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப் சுற்றோடு வெளியேறியது. ஆண்கள் உலகக் கோப்பையைத் தொடர்ந்து பெண்கள் உலகக் கோப்பையிலும் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியால் வெளியேறியிருக்கிறது ஜெர்மனி. அதேசமயம் தரவரிசையில் மிகவும் பின்தங்கியிருந்தும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அசத்தியிருக்கிறது மொராக்கோ (72வது இடம்).