சாம்பியன்ஸ் லீக்: கோல்கீப்பரின் கோலால் தப்பித்த லாசியோ... கடைசி நிமிட கோலால் வென்ற ரியல் மாட்ரிட்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் புதிய சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. முதல் வாரமே பல பரபரப்பான போட்டிகள் பல பரபரப்பான முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் முகநூல்
Published on

இன்டர் மிலன், செவியா, கெலடசரே போன்ற அணிகள் போராடி டிரா செய்திருக்கின்றன. கோல் கீப்பர் அடித்த ஒரு கோலால் அத்லெடிகோ மாட்ரிட்டுக்கு எதிரான போட்டியை கடைசி நிமிடத்தில் டிரா செய்தது லாசியோ. ரியல் மாட்ரிட் அணியோ கடைசி நிமிட் கோலால் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேயர்ன் மூனிச் vs மான்செஸ்டர் யுனைடட் போட்டியில் 7 கோல்கள் அடிக்கப்பட்டன!

 ரியல் மாட்ரிட் அணி
ரியல் மாட்ரிட் அணிகால்பந்து

இந்த சீசனின் முதல் போட்டிகள் செவ்வாய்கிழமை இரவு நடந்தன. குரூப் ஆஃப் டெத்தில் நடந்த ஏசி மிலன் vs நியூகாசில் யுனைடட் ஆட்டம் 0-0 என டிரா ஆனது. ஏசி மிலன் அணி ஆரம்ப கட்டத்தில் தொடர்ச்சியாக அட்டாக் செய்தது. இருந்தாலும் 20 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு கம்பேக் கொடுத்திருக்கும் நியூகாசில் அணி சிறப்பாக டிஃபண்ட் செய்தது.

அந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 25 ஷாட்கள் அடித்தது ஏசி மிலன். அதில் 9 ஷாட்கள் இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன. ஆனால் அவர்களால் அவற்றில் ஒன்றைக் கூட கோலாக்க முடியவில்லை. அவை அனைத்தையும் நிக் போப் அபாரமாகத் தடுத்தார். முழு போட்டியிலும் டிஃபன்ஸில் கவனம் செலுத்தவேண்டியிருந்ததால், அந்த அணியால் அட்டாக்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்
மீண்டு எழுமா பேயர்ன் மூனிச்; ’சாம்பியன்ஸ் லீக்’கை வென்று கொடுப்பாரா பயிற்சியாளர் தாமஸ் டுகெல்?

அதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என பொருஷியா டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது. முதல் பாதியில் சிறப்பாக டிஃபண்ட் செய்த டார்ட்மண்ட், இரண்டாவது பாதியின் முதல் 15 நிமிடங்களிலேயே இரண்டு கோல்கள் விட்டது. இரண்டாவது பாதி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே பிஎஸ்ஜி அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதை கிலியன் எம்பாப்பே கோலாக்கினார். அடுத்த 10 நிமிடங்களிலேயே முன்னிலையை இரட்டிப்பாக்கினார் அச்ரஃப் ஹகிமி. அதனால் அந்தப் பிரிவில் இப்போது பிஎஸ்ஜி முதலிடம் பிடித்திருக்கிறது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்
தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக்... கோப்பை வெல்ல எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்?

பிஎஸ்ஜி போல் மான்செஸ்டர் சிட்டியும் இரண்டாவது பாதியில் ஒரு மகத்தான கம்பேக் கொடுக்கவேண்டியதாக இருந்தது. கிரெவ்னா ஸ்வெஸ்டா அணியோடு மோதிய சிட்டி முதல் பாதியிலேயே ஒரு கோல் விட்டது. அந்த அணி பின்தங்கிய நிலையில் முதல் பாதி முடிய, அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது சிட்டி. யூலியன் ஆல்வரஸ் 2 கோல்கள் அடித்தார். அசத்தாலான ஃபார்மில் இருக்கும் ராட்ரி ஒரு கோல் அடித்தார். அதனால் 3-1 என வெற்றி பெற்றது அந்த அணி.

கார்டியோலாவின் முன்னாள் அணியான பார்சிலொனா 5-0 என பெல்ஜியம் கிளப்பான ராயல் ஆன்ட்வெர்ப்பைப் பந்தாடியது. ஜோ ஃபீலிக்ஸ் இரண்டு கோல்கள் அடித்து தன் அசத்தல் ஃபார்மைத் தொடர்ந்தார். ராபர்ட் லெவண்டோஸ்கி, காவி ஆகியோரும் தலா 1 கோலடித்தனர். ஒரு ஓன் கோலும் கிடைக்க, 5 கோல்கள் பதிவு செய்தது அந்த அணி. பார்சிலோனாவைப் போல் ஆர்செனலும் கோல் மழை பொழிந்தது. பிஎஸ்வி எய்ந்தோவன் அணியோடு விளையாடிய ஆர்செனல் 4-0 என வெற்றி பெற்றது. கேப்ரியல் ஜீசுஸ், புகாயோ சகா, லியாண்ட்ரோ டிரொசார்ட், மார்டின் ஓடகார்ட் என அந்த அணியின் முன்கள வீரர்கள் அனைவருமே கோலடித்து அசத்தினர்.

இந்த கேம்வீக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான பேயர்ன் மூனிச் vs மான்செஸ்டர் யுனைடட் ஆட்டத்தில் 4-3 என பேயர்ன் அணி வெற்றி பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் மான்செஸ்டர் யுனைடட் சிறப்பாக ஆடியது. தொடர்ந்து அட்டாக் செய்த அந்த அணி கார்னர்களாக வென்றுகொண்டிருந்தது. ஆனால் 28வது நிமிடத்தில் எல்லாம் மாறியது. லெராய் சனே நேரே அடித்த ஷாட்டை, தன் தவறால் கோலாக விட்டார் யுனைடட் கோல்கீப்பர் ஆண்ட்ரே ஒனானா. அடுத்த 4 நிமிடங்களில் செர்ஜ் நேப்ரி இன்னொரு கோல் அடித்து நெருக்கடியை அதிகப்படுத்தினார்.

பேயர்ன் மூனிச் vs மான்செஸ்டர் யுனைடட்
பேயர்ன் மூனிச் vs மான்செஸ்டர் யுனைடட்முகநூல்

இருந்தாலும் இரண்டாவது பாதியில் கம்பேக் கொடுத்தது யுனைடட். 49வது நிமிடத்தில் ஸ்டிரைக்கர் ஹோய்லண்ட் கோலடித்தார். ஆனால் அடுத்த 5 நிமிடங்களிலேயே பெனால்டி மூலம் மூன்றாவது கோலை வாங்கியது அந்த அணி. ஹேரி கேன் எந்த சிக்கலும் இல்லாமல் அதை கோலாக்கினார். 88வது நிமிடத்தில் கசமிரோ கோலடித்து யுனைடட் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனால் மீண்டும் 4 நிமிடத்தில் கோல் வாங்கியது யுனைடட். இம்முறை கோலடித்தவர் மதியஸ் டெல். போட்டி முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தாலும், ஸ்டாப்பேஜ் டைமின் மூன்றாவது நிமிடத்தில் கசமிரோ இன்னொரு கோலடித்தார். இறுதியில் 4-3 என வென்றது பேயர்ன் மூனிச்.

இந்த வாரம் நடந்த ஒரு வேடிக்கையான விஷயம் ஒரு கோல்கீப்பர் கோலடித்தது! லாசியோ vs அத்லெடிகோ மாட்ரிட் போட்டியில், பாப்லோ பரியோஸ் 29வது நிமிடத்தில் கோலடித்து சிமியோனின் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.

போட்டி 1-0 என முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் லாசியோவுக்கு கார்னர் கிடைத்தது. போட்டியை டிரா செய்யவேண்டும் என்ற நோக்கில் அனைத்து லாசியோ வீரர்களுமே அத்லெடிகோ பாக்ஸை முற்றுகையிட்டனர்.

லூயிஸ் ஆல்பர்டோவின் கிராஸை அற்புதமாக ஹெட் செய்து கோலாக்கினார் லாசியோ கோல்கீப்பர் இவான் புரோவெடெல்! அதனால் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.ஆர்பி லெப்சிக், ஃபேயனூர்ட், போர்டோ, ஆர்பி சால்ஸ்பெர்க், நெபோலி ஆகிய அணிகளும் முதல் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com