உலகக் கோப்பை கொண்டாட்டத்தின்போது ஸ்பெய்ன் வீராங்கனை மரியோ ஹெர்மோசோவுக்கு அந்நாட்டு கால்பந்து அசோசியேஷன் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தம் கொடுத்த விஷயம் பூகம்பமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படும் வரை போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று வீராங்கனைகள் அறிவிக்க, ஹெர்மோசோ மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தற்போது தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ஸ்பெய்ன் கால்பந்து சங்கம்.
பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து முடிந்தது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்தை 1-0 என வீழ்த்தி உலக சாம்பியனாக மகுடம் சூடியது ஸ்பெய்ன். 2010 ஆண்கள் உலகக் கோப்பையை வென்ற அந்த நாட்டுக்கு, மகளிர் அரங்கில் இதுவே முதல் உலகக் கோப்பை. மொத்த உலகமும் ஸ்பெய்னின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்க, பரிசளிப்பு விழாவின்போது ஒரு அசம்பாவிதம் நடந்தேறியது.
ஸ்பெய்ன் வீராங்கனைகள் ஒவ்வொருவராக மேடை ஏறி தங்களின் தங்க மெடல்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். மெடலைப் பெற்றுவிட்டு, மேடையில் நின்றிருந்த ஸ்பெய்ன் கால்பந்து அசோசியேஷனின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில், அணியின் முன்னணி வீராங்கனையான மரியோ ஹெர்மேசோ மெடலை வாங்கிவிட்டு ரூபியேல்ஸ் வந்தபோது அவரோடு வெற்றியைக் கொண்டாடுகையில் உதட்டில் முத்தம் கொடுத்தார் ரூபியேல்ஸ். இந்தப் புகைப்படங்கள் வெளியானதும், பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பலரும் ரூபியேல்ஸின் செயலை கடுமையாகக் கண்டிக்கத் தொடங்கினார்கள்.
பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர் வீராங்கனைகள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்டு விளையாட்டு வீராங்கனைகள் பலரும் ஹெர்மோசோவுக்கு ஆதரவாகவும் ரூபியேல்ஸை கண்டித்தும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவந்தனர். இதற்கிடையே, "ஹெர்மோசோ ஒத்துக்கொண்டதால் தான் நான் முத்தம் கொடுத்தேன்" என்று சில தினங்களுக்கு முன்பு கூறினார் ரூபியேல்ஸ்.
ரூபியேல்ஸ் அப்படிக் கூறியதும், அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் ஹெர்மோசோ. "எந்த ஒரு தருணத்திலும் நான் முத்தத்துக்கு ஒப்புதல் தரவில்லை. என் வார்த்தைகள் சந்தேகிக்கப்படுவதை நான் எப்போதும் வெறுக்கிறேன். இத்தனைக்கும் நான் சொல்லாததை அவர்களாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஹெர்மோசா.
ஹெர்மோசோவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு வந்துகொண்டிருந்த நிலையில், ரூபியேல்ஸ் பதவிநீக்கம் செய்யப்படும் வரை தாங்கள் தேசிய அணிக்கு ஆடப்போவதில்லை என்று ஸ்பெய்ன் அணி வீராங்கனைகள் அறிவித்தார்கள். உலகக் கோப்பையை வென்ற 23 வீராங்கனைகள் மட்டுமல்லாது, அத்தொடரில் இடம்பெறாத மற்ற வீராங்கனைகளும் சேர்ந்தே அந்த அறிக்கையை வெளியிட்டனர்.
ஸ்பெய்னில் வீராங்கனைகள் இப்படிக் குரல் கொடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவுடனான பிரச்சனை ஓராண்டாக முடியாமல் சென்றுகொண்டே இருக்கிறது. பயிற்சியாளரின் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாத பல வீராங்கனைகள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதனால் பலரும் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதும் வீராங்கனைகள் தேசிய அணிக்கு விளையாட முடியாது என்று கூறியிருந்தனர். அப்போது கூட வீராங்கனைகளின் பக்கம் நிற்காமல் பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவுக்கு சாதகமாகவே இருந்தார் ரூபியேல்ஸ். கிட்டத்தட்ட சர்வாதிகாரி போல் ரூபியேல்ஸ் நடந்துகொண்டிருந்ததால் தான் அனைவரும் இன்னும் அதிகமாக குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். வீராங்கனைகள் மட்டுமல்லாமல் போர்கா இக்லெசியாஸ், ஹெக்டர் பெயரின் உள்ளிட்ட ஸ்பெய்ன் வீரர்களும் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை தாங்கள் தேசிய அணிக்கு விளையாடப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஹெர்மோசோவின் அறிக்கைக்குப் பதில் அறிக்கையாக இன்று ஸ்பெய்ன் கால்பந்து சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ஹெர்மோசோ பொய் சொல்வதாகவும், அவர் மீது வழக்கத் தொடர்வோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல் தேசிய அணிக்கு ஆட மறுத்திருக்கும் 79 ஸ்பெய்ன் வீராங்கனைகள் மீதும் வழக்குகள் பாயும் என்று எச்சரித்துள்ளது. இது மேலும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியிருக்கிறது.
ஸ்பெய்னின் துணை அதிபரே கூட ரூபியேல்ஸ் பதவி விலகவேண்டும் என்று தன் கருத்தைக் கூறியிருக்கிறார். பதவி விலக மறுக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் இன்னும் மிரட்டும் இடத்தில் இருந்துகொண்டிருக்கிறார் ரூபியேல்ஸ். ஸ்பெய்ன் அரசு நேரடியாக தலையிடும் வரை இந்தப் பிரச்சனை முடிவுக்கு வருவது சந்தேகம் தான். பொது இடத்தில் இழிவாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், சர்வாதிகாரி போல தன் அசோசியேஷனை நடத்திக்கொண்டிருக்கும் ரூபியேல்ஸ் நிச்சயம் தண்டனை பெறவேண்டும்.