ரொமேலு லுகாகுவின் கால்பந்து கரியரில் மேலும் ஒரு பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. இன்டர் மிலன் அணியில் அவர் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது அந்த அணியின் ரசிகர்களே அவருக்கு எதிராக அறிக்கை விடும் நிலை வந்திருக்கிறது. கடைசியில் தான் சமீபமாக ஆடிய ஒவ்வொரு அணியின் ரசிகர்களுமே வெறுக்கும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறார் ரொமேலு. உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட அவர் நிலை, இப்போது மிகவும் கவலைதரும் ஒன்றாக மாறியிருக்கிறது.
ரொமேலு லுகாகுவின் கால்பந்து வாழ்க்கை ஆரம்ப காலத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களையும் மாற்றங்களையும் கொண்டதாகவே இருந்தது. பெல்ஜியத்தின் ஆண்டர்லெக்ட் கிளப்பில் தொடங்கியது அவரது தொழில்முறை கால்பந்து வாழ்க்கை. அந்த அணிக்காக ஆரம்ப காலத்திலேயே அசத்திய அவர், உலகின் பல முன்னணி கிளப்களின் கவனத்தை ஈற்றார். 2011-12 சீசனுக்கு முன்பாக அவரை சுமார் 10 மில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியது இங்கிலாந்தின் செல்சீ அணி. அப்போது அவருக்கு வயது 18 தான்.
உலகின் பிரசித்த பெற்ற அணியான செல்சீயில் அப்போது நட்சத்திர ஸ்டிரைக்கர்களான டிடியர் ட்ரோக்பா, ஃபெர்னாண்டோ டாரஸ் இருவரும் ஆடிவந்தனர். அதனால், லுகாகுவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அனைத்து தொடர்களிலும் சேர்த்தே மொத்தம் 12 போட்டிகளில் தான் அவர் விளையாடினார். அந்த சீசன் செல்சீ அணியின் சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்று ஐரோப்பாவின் சாம்பியனாக மகுடம் சூடியது. ஆனால், அந்த சீசனில் அவர் ஒரு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கூட விளையாடவில்லை. அதனால், அந்தக் கோப்பையைத் தூக்கக் கூட மறுத்தார் அவர். "இதை நான் வெல்லவில்லை. என் அணிதான் வென்றது" என்று கூறினார் அவர். 18 வயதைலேயே அந்த அளவுக்கு வெளிப்படையாகப் பேசக்கூடியவர் அவர். ஆனால், அதுவே அவருக்கு பின்னாள்களில் பிரச்னையாகவும் அமைந்தது.
முதல் சீசனில் அவருக்கு செல்சீயில் அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அடுத்த சீசன் அவரை லோனில் வெஸ்ட் புரோம்விச் ஆல்பியான் அணிக்கு அனுப்பியது அணி நிர்வாகம். அங்கு மிகச் சிறப்பாக விளையாடிய அவர் அந்த பிரீமியர் லீக் சீசனில் 17 கோல்கள் அடித்தார். அடுத்த சீசன் இன்னும் கொஞ்சம் பெரிய அணியான எவர்டனுக்கு அவரை லோனில் அனுப்பியது செல்சீ. அங்கும் நன்றாக விளையாடிய அவர், 31 போட்டிகளில் 15 கோல்கள் அடித்தார்.
2014-15 சீசனுக்கு செல்சீ அணியோடு லுகாகு இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது பயிற்சியாளராக இருந்த மொரினியோ வேறு திட்டம் வைத்திருந்தார். டியாகோ கோஸ்டா போன்ற ஒரு உலகத்தர ஸ்டிரைக்கரை ஒப்பந்தம் செய்தது செல்சீ. செஸ்க் ஃபேப்ரகாஸ், ஃபிளிப்பே லூயிஸ் என பல வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். மேலும், முன்னாள் வீரரும் கிளப் ஜாம்பவானுமான ட்ரோக்பாவை மீண்டும் அணிக்கு கொண்டுவந்தார் மொரினியோ. இந்நிலையில் எவர்டன் அணி ட்ரோக்பாவை வாங்க முன்வந்தது. ஒருசில புதிய வீரர்களை வாங்கியதால், அவரை விற்பது அப்போதைக்கு நல்ல முடிவு என்று நினைத்த செல்சீ, 28 மில்லியன் பவுண்டுக்கு அவரை விற்றது.
அடுத்த 3 சீசன்கள் எவர்டனில் பட்டையைக் கிளப்பினார் லுகாகு. அதிலும் 2016-17 பிரீமியர் லீக் சீசனில் 25 கோல்கள் அடித்து மிரட்டினார். அதனால் அவரை அடுத்த சீசன் 75 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது மான்செஸ்டர் யுனைடட். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் போகப் போக அவரது ஃபார்ம் சரியத் தொடங்கியது. அந்த அணிக்காக 66 பிரீமியர் லீக் போட்டிகளில் 28 கோல்களே அடித்தார் அவர். அதுமட்டுமல்லாமல் பல முக்கியமான தருணங்களில் தவறுகள் செய்தார். மிகப் பெரிய அணி என்பதால், அந்தத் தவறுகள் அவர் மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இரண்டே ஆண்டுகளில் அவரின் மான்செஸ்டர் பயணம் முடிவுக்கு வந்தது.
2019-20 சீசனுக்கு முன் அவரை 80 மில்லியன் யூரோவுக்கு வாங்கியது இத்தாலியின் இன்டர் மிலன் கிளப். அங்கு கொடிகட்டிப் பறந்தார் அவர். லௌடாரா மார்டினஸ் உடன் இணைந்து 2 ஸ்டிரைக்கர் ஃபார்மேஷனில் விளையாடிய அவர், இத்தாலியில் கோல் மழை பொழிந்தார். 2 ஆண்டுகளில், 64 கோல்கள் (95 போட்டிகளில்) அடித்துக் குவித்தார். அவருடைய அற்புதமான ஃபார்ம் காரணமாக மீண்டும் அவரை ஒப்பந்தம் செய்தது அவரின் முதல் பெரிய கிளப்பான செல்சீ. 10 ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியவரை, இப்போது 97.5 மில்லியன் பவுண்டு கொடுத்து மீண்டும் வாங்கியது. "எனக்கு இங்கு முடிக்கவேண்டிய காரியம் நிறைய இருக்கிறது" என்று கூறினார் அவர். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல் அவரது சீசன் அமையவில்லை.
அவரால் இத்தாலியில் ஆடியதைப் போல் ஆட முடியவில்லை. நிறைய தவறுகள் செய்தார். எளிதான வாய்ப்புகளையும் கூடத் தவறவிட்டார். 26 பிரீமியர் லீக் போட்டிகளில் வெறும் 8 கோல்கள் மட்டுமே அடித்தார். சீசன் நடுவிலேயே அவரை பெஞ்சில் அமரவைக்கத் தொடங்கினார் பயிற்சியாளர் தாமஸ் டுகெல். ஒரு பேட்டியில் டுகெலின் சிஸ்டமால்தான் பெரிதாக சோபிக்க முடியவில்லை என்று அவர் கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதனால், அடுத்த சீசனுக்கு முன்பாக மீண்டும் இன்டர் மிலன் அணிக்கே லோனில் அனுப்பப்பட்டார் லுகாகு.
இப்போது அந்த லோன் முடிந்து அவர் செல்சீக்குத் திரும்பிவிட்டார். அவரை வைத்துக்கொள்ள செல்சீக்கோ, அங்கு தொடர அவருக்கோ விருப்பம் இல்லை. இன்டர் மிலனுக்கு திரும்பவே அவர் விரும்பினார். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடியை சந்தித்த அந்த அணியால் அவரைப் பெரும் தொகை கொடுத்து வாங்க முடியாத நிலை. செல்சீ சற்று வளைந்து கொடுக்க நினைத்தது, அனைத்து தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நிலையில் லுகாகுவின் தரப்பு யுவன்டஸ் அணியோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தது. அது உறுதி என்று தெரிந்த நிலையில், அவர் மீது கோபம் கொண்ட இன்டர் மிலன் நிர்வாகம் அவரை ஒப்பந்தம் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், "லுகாகுவின் கடினமான காலத்திலெல்லாம் நாங்கள் உடன் இருந்தோம். ஆனால் அவர் செய்திருப்பது மிகப் பெரிய துரோகம். இதை மன்னிக்கவே முடியாது. அவரை இதற்கு மேல் பார்க்கவே கூடாது" என்பது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் இன்டர் மிலன் ரசிகர்கள்.
யுவன்டஸ் முழு ஈடுபாட்டோடு அவரை ஒப்பந்தம் செய்யுமா என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், பல சவுதி அரேபிய அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய நினைக்கின்றன. ஆனால் அதில் லுகாகு ஈடுபாடு காட்டவில்லை. இப்போது அவருடைய நிலை பெரும் கவலைக்கிடமாக இருக்கிறது.
ஒருகாலத்தில் உலகின் முன்னணி ஸ்டிரைக்கர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர், இப்போது எங்கு எந்த அணியில் விளையாடுவார், தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதற்குப் பதில்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே!