சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக், யூரோப்பா கான்ஃபரஸ் லீக் என இந்த வார ஐரோப்பிய தொடர்களில் பிரீமியர் லீக் அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியின் செயல்பாடும் பாராட்டப்பட்டிருக்கும் நிலையில், மான்செஸ்டர் யுனைடட் மட்டும் புதுப்புது வழிகள் தேடிக் கண்டுபிடித்து சொதப்பியிருக்கிறது.
சாம்பியன்ஸ் லீக் அரங்கில் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடட், இந்த வாரம் கலடஸரே அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தோற்றால் நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழக்கவேண்டியிருக்கும். அதனால் அந்த அணி பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தான் இஸ்தான்புல் நகரில் களம் கண்டது. கடந்த வாரம் பிரீமியர் லீகில் ஒரு அசத்தலான பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்திருந்த இளம் மான்செஸ்டர் யுனைடட் அலெஹாண்ட்ரோ கர்னாச்சோ தன் அணிக்கு இந்தப் போட்டியிலும் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். கேப்டன் புரூனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த பாஸை புயல் வேகத்தில் அவர் அடிக்க, 11வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது ரெட் டெவில்ஸ்.
அடுத்த ஏழே நிமிடங்களில் அந்த அணிக்கு இரண்டாவது கோலும் கிடைத்தது. அதை கேப்டன் புரோனோவே அடித்தார். பாக்ஸுக்கு வெளியே இருந்து ராக்கெட் போல் அவர் அனுப்பிய பந்து கோல்கீப்பர் முஸ்லேராவை ஏமாற்றி கோலானது. 18 நிமிடங்களிலேயே 2-0 என முன்னிலை பெற்றது யுனைடட். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே பதில் கோல் திருப்பியது கலடஸரே. பாக்சுக்கு வெளியெ கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை ஹகிம் ஜியெச் கோலாக மாற்றினார். சுமாரான ஃப்ரீ கிக் தான் என்றாலும், யுனைடட் கோல்கீப்பர் ஆண்ட்ரே ஒனானா சரியாகக் கணிக்காததால், அது கோலானது. அதனால் முதல் பாதியை 2-1 என்ற முன்னிலையோடு முடித்தது டென் ஹாகின் அணி.
இரண்டாவது பாதி தொடங்கி பத்தே நிமிடங்களில் மீண்டும் இரண்டு கோல் முன்னிலை பெற்றது மான்செஸ்டர் யுனைடட். வேன் பிசாகா வலது விங்கில் இருந்து கொடுத்த கிராஸை ஸ்காட் மெக்டோமினே கோலாக்கினார். அதனால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் கடைசி அரை மணி நேரத்தில் யுனைடட் சொதப்பியது. 62வது நிமிடத்தில் முதல் பாதியில் நடந்ததே மீண்டும் நடந்தது. கலடஸரேவுக்கு ஃப்ரீ கிக்... ஜியெச் எடுக்கிறார்... ஒனானா சொதப்புகிறார்... கோல்! அதிலிருந்து மான்செஸ்டர் யுனைடட் மீள்வதற்குள் அடுத்த ஒன்பதாவது நிமிடமே அடுத்த கோலும் வந்தது. ஜியெச் கொடுத்த பாஸை அக்துர்கோக்லு அட்டகாசமாக கோலாக்கினார். அதனால் ஆட்டம் 3-3 என்றானது. இரு அணிகளும் அதற்கு மேல் கோலடிக்காமல் போக, ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த முடிவு மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. இதுவரை ஒரு வெற்றி, ஒரு டிரா மட்டுமே கண்டிருக்கும் அந்த அணி 5 போட்டிகளில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று தங்கள் பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த அணி தங்கள் கடைசிப் போட்டியில் பேயர்ன் மூனிச் அணியோடு மோதப்போகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றைப் பற்றி யோசிக்க முடியும். மூன்றாவது இடம் பிடித்து யூரோப்பா லீகுக்கு தகுதி பெறுவதே இப்போது கடினமான விஷயமாக மாறிப்போயிருக்கிறது!
ஐரோப்பிய அரங்கில் மான்செஸ்டர் யுனைடட் தோற்றிருந்தாலும் மற்ற இங்கிலாந்து அணிகள் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மான்செஸ்டரின் மற்றொரு அணியான சிட்டி ஒரு கட்டத்தில் தோல்வி முகத்தில் தான் இருந்தது. முதல் பாதியின் முடிவில் 0-2 என பின்தங்கியிருந்தது அந்த அணி. ஆனால் அட்டகாசமான இரண்டாவது பாதியின் காரணமாக 3-2 என அந்தப் போட்டியை வென்றது கார்டியோலாவின் அணி. எர்லிங் ஹாலண்ட், ஃபில் ஃபோடன், யூலியன் ஆல்வரஸ் ஆகியோர் அந்த அணிக்காக கோலடித்தனர். ஆர்செனல் அணியோ இவர்களைப் போல் தடுமாறவில்லை. லென்ஸ் அணியை தட்டித் தூக்கியது. ஆறு வேறு வீரர்கள் தலா ஒரு கோல் அடிக்க, 6-0 என அபார வெற்றி பெற்று அந்த குரூப்பையும் வென்றது ஆர்செனல்.
யூரோப்பா லீகில் ஆடும் வெஸ்ட் ஹாம் யுனைடட் 1-0 என செர்பிய கிளப்பான பக்கா டொபோலாவை வீழ்த்தியது. பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணி AEK ஏதன்ஸை 1-0 என தோற்கடித்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. LASK அணியோடு மோதிய லிவர்பூல் 4-0 என அபார வெற்றி பெற்றது. யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீகில் ஆடும் ஆஸ்டன் வில்லா 2-1 என லெஜியா வார்ஸா அணியை தோற்கடித்தது.
இந்த அணிகளெல்லாம் வெற்றி பெற்றிருக்க, நியூகாசில் யுனைடட் அணி தங்கள் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தை டிராவே செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அணியுடனான அந்தப் போட்டியில் அவர்கள் வென்றிருக்கவேண்டும். நடுவர் தவறாக பிஎஸ்ஜி-கு பெனால்டி வழங்கியதால், அந்த ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இருந்தாலும் அந்த அணி நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.