பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல் vs ஆர்செனல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முதலிடத்தில் எதிர்கொள்கிறது ஆர்செனல்.
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 18வது கேம்வீக் நடந்துவருகிறது. கிறிஸ்துமஸுக்கு முக்கிய வாரம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில், வழக்கமாக பிரீமியர் லீகில் ஒரு அணி கிறிஸ்துமஸ் சமயத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது பெரிதாக பேசப்படும். காரணம், சீசனின் இரண்டாவது பாதிக்கான உத்வேகத்தை அதுவே கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் முதலிடத்தில் இருக்கும் அணிகளே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் ஆர்செனல் மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின. இரு பலம் வாய்ந்த அணிகள் என்பதையும் தாண்டி, இந்தப் போட்டியின் முடிவு யார் முதலிடத்தில் இருப்பார்கள் என்பதை நிர்ணயிக்கும் என்பதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமானது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் ஆர்செனல் 39 புள்ளிகளுடனும், லிவர்பூல் 38 புள்ளிகளுடனும் இருந்தன. வெற்றி பெற்றால் லிவர்பூல் முதலிடத்துக்கு முன்னேறும். தோல்வியைத் தவிர்த்தாலே ஆர்செனல் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இப்படிப் பட்ட நிலையில் தான் ஆன்ஃபீல்ட் மைதானத்தில் இந்த ஆட்டம் தொடங்கியது.
ஆட்டம் ஆர்செனலுக்கு அமர்க்களமாகத் தொடங்கியது. போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே கோலடித்து ஆர்செனலுக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் டிஃபண்டர் கேப்ரியல் மாங்கலீஸ். கை ஹாவர்ஸை லிவர்பூல் மிட்ஃபீல்டர் டொமினிக் ஷொபோஷ்லாய் ஃபவுல் செய்ய, அட்டாக்கிங் ஏரியாவில் ஆர்செனலுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த ஃப்ரீ கிக்கை கேப்டன் மார்டின் ஓடகார்ட் மிகச் சிறப்பாக கிராஸ் செய்ய, அட்டகாசமாக ஹெட்டர் செய்து அதை கோலாக்கினார் கேப்ரியல்.
பின்தங்கிய பிறகு பதில் கோல் திருப்பவேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து போராடியது லிவர்பூல். பாசிடிவாக ஆடிய அந்த அணி வாய்ப்புகளை சீராக உருவாக்கிக்கொண்டே இருந்தது. அதன் பலனாக, அந்த அணியின் சூப்பர் ஸ்டார் முகமது சலா 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட் கொடுத்த பாஸை சிறப்பாக கன்ட்ரோல் செய்து கோலாக்கினார் சலா. அதன்மூலம் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. அதன்பிறகு இரு அணிகளுக்கும் ஒருசில நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. கேபிரியல் மார்டினெல்லி (ஆர்செனல்), ஜோ கோமஸ் (லிவர்பூல்), கிராண்ட் எலியாட் (லிவர்பூல்), அலெக்சாண்டர் ஆர்னால்ட் ஆகியோரால் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கோலாக்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என சமனில் முடிய, ஒரு வழியாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது
1. ஆர்செனல் - 40 புள்ளிகள்
2. லிவர்பூல் - 39 புள்ளிகள்
3. ஆஸ்டன் விலா - 39 புள்ளிகள்
4. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் - 36 புள்ளிகள்
5. மான்செஸ்டர் சிட்டி - 34 புள்ளிகள்
* மற்ற அணிகள் 18 போட்டிகளில் விளையாடியிருக்க, மான்செஸ்டர் சிட்டி 17 போட்டிகளே ஆடியிருக்கிறது.
இந்தப் போட்டியின் முடிவு லிவர்பூல் அணியை விட ஆஸ்டன் விலாவுக்கு நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் இருக்கும். ஏனெனில், முந்தைய நாள் அந்த அணிக்கு முதலிடத்துக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருந்தது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஷெஃபீல்ட் யுனைடட் அணியை தங்கள் சொந்த மைதானமான விலா பார்க்கில் எதிர்கொண்டது ஆஸ்டன் விலா. தொடர்ந்து 15 ஹோம் ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த அணி, கடைசி இடத்தில் இருக்கும் அணியை எதிர்கொள்வதால் வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியால் இந்த ஆட்டத்தை 1-1 என டிராவே செய்ய முடிந்தது. அதனால் இந்தப் போட்டியில் 1 புள்ளி மட்டுமே பெற்ற அந்த அணி 39 புள்ளிகளுடன் இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், இன்னும் 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றிருக்கும். 41 புள்ளிகளோடு இப்போது அந்த அணி முதலிடத்தில் இருந்திருக்கும். அந்த அற்புதமான வாய்ப்பை தவறவிட்டுருக்கிறது ஆஸ்டன் விலா.