யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி, 4ஆவது முறையாக சாம்பியன் ஆனது. ஸ்பெயின் அணியில் 16 வயது இளம் வீரராக அறிமுகமான LAMINE YAMAL, கால்பந்து வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். யூரோ கோப்பை போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையை பெற்ற யமல், பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
1958ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 17 வயதில் கால்பந்து ஜாம்பவான் பீலே, பிரேசில் அணிக்காக கோல் அடித்து சாதனை படைத்து இருந்தார். தற்போது யூரோ கோப்பை போட்டியில் 16 வயதில் கோல் அடித்ததன் மூலம் பீலேவின் சாதனையை யமல் முறியடித்தார். இதையடுத்து யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இளம் வீரர், கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த இளம்வீரர் என்ற சாதனைகளுக்கும் யமல், சொந்தக்காரராகியுள்ளார்.
யூரோ கோப்பை தொடரில் கோல் அடிக்க 4முறை உதவியது, ஒரு கோல் அடித்தது என சிறப்பான பங்களிப்பை செலுத்திய யமலுக்கு, சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி 17 வயதில் அடியெடுத்து வைத்துள்ள யமல், தமக்கு கிடைத்த மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு என மகிழ்ச்சி தெரிவித்தார்.