லா லிகா: வெற்றியோடு தொடங்கியது ரியல் மாட்ரிட்..!

அறிமுக போட்டியிலேயே கோலடித்தார் ஜூட் பெல்லிங்ஹம்
La Liga
La Liga twitter
Published on

புதிய லா லிகா சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது ரியல் மாட்ரிட். அத்லெடிக் கிளப்புக்கு எதிரான போட்டியை 2-0 என வென்றிருக்கிறது அந்த அணி. தன் முதல் லா லிகா போட்டியில் விளையாடிய இளம் இங்கிலாந்து மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்ஹம் அறிமுக போட்டியிலேயே கோலடித்து அசத்தினார்.

2023-24 லா லிகா சீசன் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் அல்மேரியாவை 2-0 என வீழ்த்தியது ரயோ வயகானோ. அதற்கடுத்து நடந்த முக்கியமான போட்டியில் வெலன்சியாவை எதிர்கொண்டது செவியா. கடந்த லீக் சீசனில் இந்த இரு அணிகளுமே தடுமாறின. இருந்தாலும் இறுதியில் யூரோபா லீக் வெற்றியோடு சீசனை நிறைவு செய்திருந்தது செவியா. ஸ்பெய்னின் முக்கிய அணிகளாக வலம் வந்துகொண்டிருந்த இவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டியில் வெலன்சியா 2-1 என வெற்றி பெற்றது.

முதல் 60 நிமிடங்கள் இந்த இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. சரியாக 60வது நிமிடத்தில் வெலன்சியாவின் மோக்டர் டியாகபி கோலடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். 9 நிமிடங்களிலேயே போட்டியை சமன் செய்தார் செவியாவின் யூசுஃப் நஸிரி. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த அணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி வீரர் லாயிக் பாடே 81வது நிமிடத்தில் ரெட் கார்ட் பெற்று வெளியேற்ற, கடைசி 10 நிமிடங்கள் 10 வீரர்களோடு மட்டும் ஆடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது செவியா. அதைப் பயன்படுத்தி 88வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தது வெலன்சியா. மாற்று வீரராக வந்த ஜாவியர் குரேரா அந்த கோலை அடித்தார்.

La Liga
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை: ஸ்பெய்ன் சாம்பியன்

பில்பாவோ நகரில் நடந்த போட்டியில் 'அத்லெடிக் கிளப்' அணியை எதிர்கொண்டது ரியல் மாட்ரிட். கேப்டன் கரிம் பென்சிமா வெளியேறியிருந்த நிலையில், இந்த சீசன் ரியல் மாட்ரிட்டின் டிரான்ஸ்ஃபர்மேஷன் சீசனாகக் கருதப்பட்டது. அதனால், அவர்கள் இந்த சீசனை எப்படித் தொடங்குவார்கள் என்றும், வினிசியஸ் - ராட்ரிகோ அட்டாகிங் கூட்டணி எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று பார்க்கவும் அனைத்து தரப்பும் ஆவலாகக் காத்திருந்தது. போக, கோல்கீப்பர் திபோட் கோர்ட்வா காயத்தால் அவதிப்பட்டதால் அதுவும் அந்த அணியின் சீசனை பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அது எதுவுமே இந்தப் போட்டியில் அந்த அணியை பாதிக்கவில்லை.

ரியல் மாட்ரிட் ஸ்டார்டிங் லெவன் vs அத்லெடிக் கிளப்: ஆண்ட்ரி லூனின், டேனி கர்வகால், எடர் மிலிடாவ், டெவிட் அலாபா, ஃப்ரான் கார்சியா, ஆரலியன் சுவாமெனி, எடுவார்டோ கமவிங்கா, ஃபெடரிகோ வால்வெர்டே, ஜூட் பெல்லிங்ஹம், ராட்ரிகோ கோஸ், வினிசியஸ் ஜூனியர்.

மோட்ரிட் - குரூஸ் போன்ற சீனியர்கள் இல்லாமல் சுவாமெனி, கமவிங்கா, வால்வெர்டே, பெல்லிங்ஹம் அடங்கிய இளம் மிட்ஃபீல்ட் இந்தப் போட்டியில் களம் கண்டது. ஆட்டத்தை பெரிதளவு தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருந்த ரியல் மாட்ரிட் 28வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இளம் அட்டாக்கர் ராட்ரிகோ இந்த சீசனில் தங்கள் அணியின் முதல் கோலை அடித்தார். அதே உத்வேகத்தோடு அடுத்த எட்டே நிமிடங்களில் இரண்டாவது கோலையும் அடித்தது ஆன்சலோட்டியின் அணி. ரியல் மாட்ரிட் அணிக்காக தன் முதல் லா லிகா போட்டியில் விளையாடிய ஜூட் பெல்லிங்ஹம் தன் முதல் கோலை அடித்து அசத்தினார். முதல் பாதி 2-0 என முடிந்தது.

இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் அணியால் கோலடிக்க முடியவில்லை. மாறாக டிஃபண்டர் எடர் மிலிடாவை காயத்தால் இழந்தது அந்த அணி. ஏரியல் பாலுக்கு முயற்சி செய்தபோது மோசமான முறையில் கீழே விழுந்த மிலிடாவ் 50வது நிமிடத்தில் களத்திலிருந்து வெளியேறினார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்காததால், ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com