ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெய்ன். ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது ஸ்பெய்ன். மகளிர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஐந்தாவது அணி என்ற பெருமையும் பெற்றது அந்த அணி.
2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்தது. முதல் முறையாக 32 நாடுகள் இத்தொடரில் பங்கேற்றன. முன்னாள் சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, நடப்பு சாம்பியன் அமெரிக்கா, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெளியேறியது. மற்றொரு முன்னாள் சாம்பியனான ஜப்பான் காலிறுதியில் வெளியேறியது. அதனால் இந்த முறை ஒரு புதிய சாம்பியன் உருவாவது உறுதியானது.
அரையிறுதியில் ஸ்வீடனை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெய்ன். இங்கிலாந்தோ போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவை 3-1 என வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-0 என தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது ஸ்வீடன்.
இறுதிப் போட்டி சிட்னியில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இரண்டும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்தப் போட்டியின் முடிவு எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்று கருதப்பட்டது. 1966 ஆண்கள் உலகக் கோப்பைக்குப் பிறகு இதுதான் இங்கிலாந்து அணிக்கு உலக்க கோப்பை அரங்கில் முதல் இறுதிப் போட்டி. அதேபோல், கடந்த ஆண்டு நடந்த மகளிர் யூரோ தொடரின் காலிறுதியில் ஸ்பெய்ன் இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. அதனால் இரண்டு அணிகளுக்குமே நிரூபிக்க நிறைய விஷயங்கள் இருந்தது.
போட்டி தொடங்கியது முதலே மிகவும் பரபரப்பாக சென்றது. 29வது நிமிடத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீராங்கனை லூசி பிரான்ஸ் ஒரு தவறு செய்ய அதைப் பயன்படுத்தி கோலடித்தார் ஸ்பெய்ன் கேப்டன் ஓல்கா. டிஃபண்டரான அவர் மரியானோ கால்டென்டியோடு அற்புதமாக பாஸிங் செய்து அந்த கோலை அடித்தார். முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது ஸ்பெய்ன்.
இறுதிப் போட்டியில் பின்தங்கியிருந்ததால் இரண்டாவது பாதி தொடங்கும்போது 2 மாற்றங்கள் செய்தார் இங்கிலாந்து பயிற்சியாளர் செரினா வெகமன். அலேசியா ரூஸோ, ரேச்சல் டேலி ஆகியோரை வெளியே எடுத்துவிட்டு லாரன் ஜேம்ஸ் மற்றும் குலோயி கெல்லி ஆகியோரைக் களமிறக்கினார். அதனால் அந்த அணி ஃபார்மேஷனையும் மாற்ற வேண்டியிருந்தது.
இங்கிலாந்து தொடர்ந்து முயற்சி செய்தாலும் ஸ்பெய்ன் அணி சிறப்பாக டிஃபண்ட் செய்ததால் இங்கிலாந்தால் கோலடிக்க முடியவில்லை. ஆனாலும் 70வது நிமிடத்தில் இன்னொரு தவறு செய்தது இங்கிலாந்து. அதனால் ஸ்பெய்ன் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இருந்தாலும் ஜெனிஃபர் ஹெர்மோசாவின் பெனால்டியை அட்டகாசமாக தடுத்தார் இங்கிலாந்து கோல்கீப்பர் மேரி எர்ப்ஸ். கடைசி நிமிடங்களில் அந்த ஒரு கோலுக்காக இங்கிலாந்து கடுமையாகப் போராடியும் அவர்களால் அந்த கோலை அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என ஃபைனலை வென்று உலக சாம்பியன் ஆனது ஸ்பெய்ன்.
இதன் மூலம் ஐந்தாவது முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வெல்லும் அணி என்ற பெருமையைப் பெற்றது ஸ்பெய்ன். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் பெண்கள் உலகக் கோப்பை என இரண்டு கோப்பைகளையும் வென்ற இரண்டாவது நாடு என்ற பெருமை பெற்றது ஸ்பெய்ன்.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 5 கோல்கள் அடித்த ஜப்பானின் ஹினாடா மியாசாவா கோல்டன் பூட் விருதை வென்றார். ஸ்பெய்னின் நட்சத்திர மிட்ஃபீல்டர் அய்டானா பொன்மாடி தொடரின் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் பால் விருதை வென்றார். இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் கோல்டன் கிளவ் விருதை வென்றார். முக்கியமான காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் கோலடித்த ஸ்பெய்னின் இளம் சென்சேஷன் சல்மா பர்யேலோ இந்தத் தொடரின் சிறந்த இளம் வீராங்கனைக்கான விருது வென்றார். ஃபேர் பிளே விருது ஜப்பான் அணிக்குக் கொடுக்கப்பட்டது.