யூரோ 2024: போராடி வென்றுது நெதர்லாந்து; வெற்றியைத் தவறவிட்டது டென்மார்க்

யூரோ 2024 கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி போலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. ஸ்லோவேனியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதிய போட்டி 1-1 என டிரா ஆனது.
Poland vs Netherlands
Poland vs Netherlandspt web
Published on

யூரோ 2024

ஐரோப்பிய கண்டத்தின் மிகப் பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 தொடர் ஜெர்மனியில் நடந்துகொண்டிருக்கிறது. நேற்று மாலை 6.30 மணிக்கு ஹேம்பர்க்கில் நடந்த போட்டியில் போலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. போலாந்து கேப்டன் ராபர்ட் லெவண்டோஸ்கி காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் போலாந்து அணியை நெதர்லாந்து எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கம் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. 16வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பில் போலாந்து அணிக்கு முதல் கோல் விழுந்தது. பீட்டர் ஜீலின்ஸ்கி அந்த கார்னரை பாக்சுக்குள் அனுப்ப, அதை அட்டகாசமாக ஆடம் புஸ்கா ஹெட்டர் செய்து கோலாக்கினார்.

Poland vs Netherlands
Poland vs Netherlandspt web

நெதர்லாந்து அணி தொடர்ந்து பல முயற்சிகள் செய்திருந்தாலும் முதல் கோலை போலாந்து அடித்துவிட, அது நெதர்லாந்து வீரர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி பேரதிர்ச்சியாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் நெதர்லாந்து அணிக்கும் ஒரு கார்னர் கிடைத்தது. ஜோயி வியர்மன் அடித்த கிராஸை பாக்சுக்கு அருகே நின்றிருந்த கேப்டன் விர்ஜைல் வேன் டைக் வாலியாக கோல் நோக்கி அடித்தார். ஆனால் போலாந்து கோல்கீப்பர் வோஷ்னியாக் ஷெஸ்னி டைவ் அடித்து அதை அட்டகாசமாகத் தடுத்தார். இருந்தாலும் 29வது நிமிடத்தில் கோடி கேக்போ கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார்.

இடது பக்கமிருந்து நாதன் அகே கொடுத்த பாஸை வாங்கியவர், போலாந்து டிஃபண்டர்களை ஏமாற்றி ஷாட் அடித்தார். அது போலாந்து டிஃபண்டர் சாலமன் மீது பட்டு கோலுக்குள் சென்றது. அதன்பிறகும் நெதர்லாந்து அணி ஒருசில வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அவர்களால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. அதிலும் குறிப்பாக சீனியர் ஸ்டிரைக்கர் மெம்ஃபிஸ் டிபாய் சில நல்ல வாய்ப்புகளை வீணடித்தார். இறுதியில் முதல் பாதி 1-1 என முடிவுக்கு வந்தது.

Poland vs Netherlands
ரஷ்யா - உக்ரைன் போர்... தீர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த அமைதி உச்சி மாநாடு.. கையெழுத்திடாத இந்தியா..

நெதர்லாந்து 2-1 என வெற்றி

இரண்டாவது பாதியில் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதற்காக ஒருசில மாற்றங்களைச் செய்தது போலாந்து. ஆனால் அவர்களால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நெதர்லாந்து அணியும் தொடர்ந்து முயற்சி செய்தும் அவர்களால் வெற்றிக்கான இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. எந்த அளவுக்கு அவர்கள் வாய்ப்பை வீணடித்தார்கள் என்றால், 90 நிமிடத்தில் அவர்கள் அடித்த 21 ஷாட்களில் நான்கு மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன. 14 ஷாட்களை கோலுக்கு வெளியேவே அடித்தார்கள் நெதர்லாந்து வீரர்கள்.

இரண்டாவது கோல் கிடைக்காததால், நெதர்லாந்து பயிற்சியாளர் ரொனால்ட் கூமணும் சிலபல மாற்றங்கள் செய்தார். அந்த மாற்றங்கள் அவருக்குப் பலனும் கொடுத்தது. 83வது நிமிடத்தில் வோட் வெகோர்ஸ்ட் இடது பக்கமிருந்து வந்த பந்தை அற்புதமாக கோலாக்கினார். அதுவே அந்த அணிக்கு வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது. போலாந்து அணி இரண்டாவது கோலுக்கு முயற்சி செய்தும் அவர்களால் அதை அடிக்க முடியவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.

Poland vs Netherlands
“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வரிசையில் அகிலேஷ் யாதவ்...

ஸ்லோவேனியா vs டென்மார்க்

இரவு 9.30 மணிக்கு ஸ்டட்கார்ட் அரேனாவில் ஸ்லொவேனியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. சி பிரிவில் இங்கிலாந்து, செர்பியா போன்ற அணிகள் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது டென்மார்க் அணிக்கு அவசியமானது. அதற்கு ஏற்ப ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே அந்த அணிக்கு முதல் கோல் விழுந்தது.

ஜோனாஸ் விண்ட் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிறிஸ்டியன் எரிக்சன் அட்டகாசமாக கோலடித்தார். அதன்பிறகு இரண்டு அணிகளும் தொடர்ந்து முயற்சி செய்தும் கூட கோல்கள் ஏதும் அடிக்க முடியவில்லை. ஸ்லோவேனிய அணி தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர்களால் ஆட்டத்தை சமனாக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர் முயற்சியின் பலனாக எரிக் ஜான்சா ஒரு கோலடித்தார். ஸ்லோவேனியாவின் கார்னரை டென்மார்க் வீரர்கள் சரியாக கிளியர் செய்யாமல் போக, அதைப் பயன்படுத்தி ஜான்சா கோலடித்தார். அதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

இன்றைய போட்டிகள்:

ஜூன் 17, மாலை 6.30 மணி: ரொமேனியா vs உக்ரைன்

ஜூன் 17, மாலை 9.30 மணி: பெல்ஜியம் vs ஸ்லோவேகியா

ஜூன் 18, அதிகாலை 12.30 மணி: ஆஸ்திரியா vs ஃபிரான்ஸ்

Poland vs Netherlands
UPI பரிவர்த்தனைகளிலும் ஏமாற்றுகிறார்களா? வெளியானது ஆய்வரிக்கை..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com