2024 யூரோ தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. 24 அணிகளில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. 6 குரூப்களில் டாப் 2 இடங்கள் பிடித்த அணிகளும், மூன்றாவது இடம் பிடித்த அணிகளில் சிறந்த 4 அணிகளும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. மிகப் பெரிய அதிர்ச்சியாக முன்னணி அணியான குரோயேஷியா குரூப் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. ஒவ்வொரு குரூப்பும் எப்படி இருந்தது, எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின என்று ஒரு பார்வை...
போட்டியை நடத்தும் ஜெர்மனி இந்தப் பிரிவை வென்றது. ஹங்கேரி மற்றும் ஸ்காட்லாந்தை வீழ்த்திய அந்த அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. முதல் போட்டியிலேயே ஹங்கேரியை 5-1 எனப் பந்தாடியது நகில்ஸ்மேனின் அணி. 1 வெற்றி, 2 டிரா என 5 புள்ளிகள் பெற்ற ஸ்விட்சர்லாந்து இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த ஹங்கேரி -3 என்ற கோல் வித்தியாசம் பெற்றிருந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ஸ்காட்லாந்து ஒரேயொரு புள்ளி மட்டுமே பெற்று வெளியேறியது.
இந்த குரூப்பில் ஸ்பெய்னின் ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இத்தாலி, குரேயேஷியா, அல்பேனியா என மூன்று நாடுகளையும் வீழ்த்தியது ஸ்பெய்ன். 3 போட்டிகளில் 5 கோல்கள் அடித்த அந்த அணி ஒரு கோல் கூட விடவில்லை. முதலிடத்தை உறுதி செய்ததால், கடைசிப் போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுத்திருந்தாலும் வெற்றி பெற்று அசத்தியது ஸ்பெய்ன். கடினமான இந்தப் போட்டியில் 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றது இத்தாலி. அல்பேனியாவுக்கு எதிரான வெற்றி அவர்களுக்கு உதவியது. உலகக் கோப்பைகளில் அசத்தும் குரோயேஷியா இந்தத் தொடரில் சொதப்பியது. ஸ்பெய்னுக்கு எதிராக தோற்ற அந்த அணி மற்ற இரு போட்டிகளிலும் டிராவே செய்தது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அல்பேனியா 1 புள்ளி மட்டும் பெற்று கடைசி இடத்தில் முடித்தது.
இந்தப் போட்டியில் டிராவுக்கு மேல் டிராவாக நடந்தது. மொத்தம் இந்த குரூப்பில் நடந்த 6 போட்டிகளில் ஐந்து டிரா ஆனது. செர்பியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது. மற்ற அனைத்து போட்டிகளுமே டிராவில் முடிந்தன. தங்களின் 3 போட்டிகளையுமே டிரா செய்த டென்மார்க் & ஸ்லோவேனியா ஒரு புள்ளியில், ஒரே கோல் வித்தியாசத்தில் முடித்தன. எல்லாமே சரிசமமாக இருந்தாலும், குறைவான மஞ்சள் அட்டைகள் பெற்றதால் டென்மார்க் இரண்டாவது இடம் பிடித்தது. ஸ்லோவேனியா மூன்றாவது இடம் பிடித்தது. 0 கோல் வித்தியாசம் இருந்ததால் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் வரிசையில் 4வது இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2 புள்ளிகள் மட்டும் பெற்று கடைசி இடத்தில் முடித்தது செர்பியா.
பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற முன்னணி அணிகள் இருக்கும் குரூப்பில் அசத்தலாக செயல்பட்டு முதலிடம் பிடித்தது ஆஸ்திரியா. பிரான்ஸுக்கு எதிராக தோற்று இத்தொடரைத் தொடங்கிய ஆஸ்திரியா மற்ற 2 போட்டிகளையும் வென்றது. வெற்றியோடு தொடங்கிய மற்ற 2 போட்டிகளையுமே டிரா தான் செய்தது. அதனால் 5 புள்ளிகளோடு இரண்டாவது இடமே பிடித்தது அந்த அணி. 4 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து மூன்றாவது இடம் பிடித்ததோடு அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. போலாந்து பிரான்ஸுக்கு எதிராக மட்டுமே டிரா செய்தது.
இந்த குரூப் கடைசி நொடி வரை பரபரப்பாக சென்றது. ஒவ்வொரு அணியுமே ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என குரூப் சுற்றை முடித்தது. நான்கு அணிகளுமே 4 புள்ளிகள் பெற்றிருக்க, கோல் வித்தியாச அடிப்படையில் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. -2 கோல் வித்தியாசம் கொண்டிருந்த உக்ரைன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. 0 கோல் வித்தியாசம் பெற்றிருந்த ஸ்லோவாகியா மூன்றாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. பெல்ஜியம், ரொமானியா இரு அணிகளுமே +1 கோல் வித்தியாசம் கொண்டிருந்தன. ஆனால் அதிக கோல்கள் அடித்ததன்படி ரொமானியா முதலிடம் பிடித்தது.
2 வெற்றிகள் பெற்று இந்தப் பிரிவை வென்றது போர்ச்சுகல். இரண்டாவது போட்டியிலேயே அது உறுதி செய்யப்பட்டதால் கடைசிப் போட்டியில் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுத்தது அந்த அணி. அதைப் பயன்படுத்தி 2-0 என அந்த ஆட்டத்தை வென்று மூன்றாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜார்ஜியா. இரண்டு வெற்றிகள் பெற்ற துருக்கியா இரண்டாவது இடம் பிடித்தது. ஒரேயொரு புள்ளி மட்டுமே செக்கியா கடைசி இடமே பிடித்தது.