முடிவுக்கு வந்தது ஹேரி கேன் 'டிரான்ஸ்ஃபர்' டிராமா! பேயர்ன் மூனிச்சில் இணைந்தார் இங்கிலாந்து கேப்டன்!

தொடர்ந்து இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஹேரி கேன் டிரான்ஸ்ஃபர் டிராமா சனிக்கிழமையன்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. சுமார் 20 ஆண்டுகள் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் இருந்த கேன், இப்போது ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணியோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
Harry Kane
Harry KaneTwitter
Published on

ஹேரி கேன் - இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனான அவர், உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மற்ற ஸ்டிரைக்கர்கள் போல் கோல்கள் அடிப்பதோடு மட்டுமல்லாமல், பிளே மேக்கர் ரோலிலும் விளையாடக் கூடியவர். நன்றாக டீப்பாக இறங்கி வந்து மற்ற அட்டாக்கர்களை ஆட்டத்துக்குள் கொண்டு வரும் வல்லமை பெற்றவர். அதனால் அவருக்குப் பல ஆண்டுகளாகவே பெரிய டிமாண்ட் இருந்துவந்தது. ஆனால் அவர் ஆடிவந்த டாட்டன்ஹாம் கிளப்பின் உரிமையாளர் ரிச்சர்ட் லெவி, அவர் வேறு கிளப்களில் இணைய விடவில்லை.

அதற்குக் காரணம், கடந்த தசாப்தத்தில் ஹேரி கேன் தான் அந்த அணியின் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார். 2004ம் ஆண்டு அந்த அணியின் அகாடெமியில் இணைந்த அவர், வேகமாக முன்னேறினார். ஸ்பர்ஸ் சீனியர் அணியின் பேக் அப் ஸ்டிரைக்கராக நுழைந்தவர், அதன்பின் அந்த அணியின் முக்கிய வீரராக மாறினார். ஒவ்வொரு ஆண்டும் கோல் மழை பொழிந்து பிரீமியர் லீக் அரங்கின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுள் ஒருவராக உருவெடுத்தார். 280 கோல்கள் அடித்து அந்த கிளப்பின் டாப் ஸ்கோரராகவும் மாறினார்.

பேயர்ன் அணியின் தேடுதலுக்கு விடையாக மாறிய கேன்!

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஹேரி கேனை வாங்க ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் கிளப் முயற்சி செய்வதாக செய்திகள் வந்தது. கடந்த சீசனுக்கு முன்பாக ராபர்ட் லெவண்டோஸ்கி பார்சிலோனாவுக்கு நகர்ந்ததால், ஒரு முன்னணி ஸ்டிரைக்கர் இல்லாமல் தான் அந்த சீசனை எதிர்கொண்டது பேயர்ன். லிவர்பூல் அணியிடமிருந்து சாடியோ மானேவை வாங்கியிருந்ததால் அவரை சென்டர் ஃபார்வேர்டாகப் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், அவருக்கு கிளப்பில் பல பிரச்சனைகள் இருக்க, அவர் சவுதி அரேபியாவின் அல் நசர் அணிக்கு இந்த சீசன் சென்றுவிட்டார். அதனால் அந்த ஒரு ஸ்டிரைக்கரை தேடிக்கொண்டே இருந்தது பேயர்ன். அதற்கு கேனை பதிலாகப் பார்த்தனர்.

Harry Kane
Harry Kane

கேனை வாங்குவதற்கு ஸ்பர்ஸ் அணிக்கு சுமார் 80 மில்லியன் யூரோக்கள் கொடுப்பதாக ஆரம்பத்தில் பேசிப் பார்த்தது பேயர்ன் மூனிச். ஆனால் ரிச்சர்ட் லெவி அவ்வளவு எளிதாக மசியவில்லை. இதுவரை டாட்டன்ஹாம் அணிக்கு ஒரு கோப்பை கூட வாங்காத கேன், சாம்பியன் பட்டங்கள் வெல்லக்கூடிய ஒரு பெரிய அணிக்குச் செல்ல விரும்புவதாகவும், பேயர்ன் மூனிச்சுக்கு செல்ல அவர் தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் இதுபற்றி பலவித கருத்துகளை தெரிவித்தனர். பிரீமியர் லீகில் அதிக கோல்கள் அடித்த ஆலன் ஷீரரின் (260 கோல்கள்) சாதனையை ஹேரி கேன் (213 கோல்கள்) முறியடிக்கவேண்டும் என்று பலர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். மற்றவர்கள், தனிநபர் சாதனைகளை விட கோப்பைகள் வெல்வதே பிரதானமாக இருக்கும். அதனால் கேன் பேயர்ன் மூனிச்சுக்கு செல்லவேண்டும் என்று கருதினர்.

110 மில்லியனுக்கு விற்க ஒப்புக்கொண்ட ஸ்பர்ஸ் அணி!

பேயர்ன் மூனிச் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் ஸ்பர்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 110 மில்லியன் யூரோவுக்கு கேனை விற்பதற்கு லெவி ஒத்துக்கொண்டார். ஹேரி கேனின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவதாலும், இதன்பிறகு அணியில் தொடர்வதற்கு அவர் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டதாலும் வேறு வழியின்றி லெவி அதற்கு ஏற்றுக்கொண்டுவிட்டார். அதனால் இந்த சனிக்கிழமை பேயர்ன் மூனிச் அணியில் இணைந்தார் அவர்.

Harry Kane
Harry KaneTwitter

13 வயதில் தொடங்கி 30 வயது வரை.. எமோசனலாக பேசிய கேன்..

அந்த அணியுடனான ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட பிறகு தன் சமூக வலைதள பக்கங்களில் ஸ்பர்ஸ் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை வீடியோ மூலம் தெரிவித்தார் கேன். அதில், "டாட்டன்ஹாம் அணியை விட்டு நான் செல்கிறேன் என்ற செய்தியை ரசிகர்களுக்கு நானே முதலில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் எனக்குள் எக்கச்சக்க எமோஷன்கள் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நான் அங்கமாக இருந்த இந்த கிளப்பை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 11 வயது சிறுவனாக இந்த கிளப்பில் இணைந்தவன், இப்போது 30 வயது ஆளாக உருவெடுத்திருக்கிறேன்" என்று உணர்ச்சிமிக்கப் பேசினார்.

Harry Kane
Harry Kane

மேலும், "இது குட்பை கிடையாது. எதிர்காலத்தில் எது எப்படி செல்லும் என்று நம்மால் சொல்ல முடியாது. இது நன்றி மட்டும் தான். விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

தொடரும் கோப்பை கனவு! விரைவில் வெல்லுங்கள் கேன்!

பேயர்ன் மூனிச் அணியோடு 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருக்கும் 30 வயதான கேன், அதன்பிறகு மீண்டும் பிரீமியர் லீகுக்கு வந்து அந்த கோல் சாதனையை முறியடிக்க நினைத்திருக்கிறாரோ என்னவோ! எது எப்படியோ உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களுள் ஒருவர் இப்போது தன் கோப்பை கனவை நோக்கி முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவெனில் அவர் சனிக்கிழமை காலை பேயர்ன் அணியில் இணைய, அன்று இரவே ஜெர்மன் சூப்பர் கப்பில் ஆர்பி லெப்ஸிக் அணியோடு விளையாடியது பேயர்ன். தன் முதல் நாளிலேயே அவர் தன் முதல் கோப்பையை வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெஞ்சிலிருந்து போட்டியைத் தொடங்கிய கேன் இரண்டாவது பாதியில் களமிறங்கினார். ஆனால் இந்தப் போட்டியில் சரியாக ஆடாத பேயர்ன் அணி 3-0 என தோல்வியடைந்தது. இன்னும் அவருடைய கோப்பை கனவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com