கொனிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் தமிழீழ மகளிர் அணி இறுதிப் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது.
FIFA எனப்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கால்பந்து சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இதில் உறுப்பினர்களாக இல்லாத நாடற்றவர்கள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கென கொனிஃபா என்ற அமைப்பின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் நார்வேயில் நடைபெற்று வந்த உலகக்கோப்பையில், மகளிர் பிரிவில் தமிழீழ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
போடோ நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழீழ அணி, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள சப்மி என்ற பகுதியைச் சேர்ந்த அணியுடன் மோதியது. இதில், ஒன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் தமிழீழ மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது. இந்நிலையில், உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறி சாதித்த தமிழீழ மகளிர் அணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.