கோடிகள் கொட்ட சவுதி தயார்... ஆனால் எம்பாப்பே தயாரில்லை! தொடரும் எம்பாப்பே - பிஎஸ்ஜி டிராமா

கிலியன் எம்பாப்பேவை வாங்க கடந்த வாரம் சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணி பிட் செய்திருக்கும் தொகை ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
Kylian Mbappe
Kylian MbappeTwitter
Published on

கிலியன் எம்பாப்பேவுக்கும் பிஎஸ்ஜி அணிக்கும் இடையிலான ஒப்பந்த விரிசல் தொடர்ந்து வரும் நிலையில், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் எம்பாப்வேவை வாங்க சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணி Bid செய்திருக்கும் தொகை ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. பிரான்ஸ் சூப்பர் ஸ்டாரை தங்கள் நாட்டுக்கு இழுக்க, அவருக்கு ஒரு ஆண்டுக்கு 700 மில்லியன் யூரோ ஊதியமாகக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது அந்த அணி. ஆனால் இதற்கு எம்பாப்பே தயாராக இல்லை!

பிஎஸ்ஜி-க்கும் எம்பாப்வே-க்கும் என்ன பிரச்னை?

பிரான்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் அட்டாக்கரான கிலியன் எம்பாப்பே இளம் வயதிலேயே ஐரோப்பிய கால்பந்து அரங்கில் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார். அவரை 2017-18 சீசனுக்கு முன்பாக மொனாகோ அணியில் இருந்து லோனில் வாங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி). அடுத்த சீசன் 180 மில்லியன் யூரோ கொட்டி அவரை வாங்கியது அந்த அணி. அப்போதிருந்து இப்போது வரை அவர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கும் பிஎஸ்ஜி அணிக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Kylian Mbappe
Kylian MbappeTwitter

எம்பாப்பேவின் பிஎஸ்ஜி ஒப்பந்தம் அடுத்த சீசனோடு (2023-24) முடிவுக்கு வருகிறது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டால், எம்பாப்பேவை எந்த அணியும் ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஒப்பந்தம் செய்ய முடியும். பிஎஸ்ஜி அணிக்கு அது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும். அதனால் எந்த அணியுமே ஒரு வீரரின் ஒப்பந்தம் கடைசி ஆண்டுக்கு வரும்போது புதிய ஒப்பந்தம் கொடுத்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு அதை நீடித்துக்கொள்வார்கள். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும் எம்பாப்பே விஷயத்தில் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால் சில நாள்களுக்கு முன்பாக, பிஎஸ்ஜி அணியோடு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்போவதில்லை என்று கூறினார் கிலியன் எம்பாப்பே. அதனால் அந்த அணியின் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.

Kylian Mbappe
Kylian MbappeTwitter

இதற்கு முன்பே எம்பாப்பே விஷயத்தில் இப்படி ஒருமுறை நடந்தது. அவர் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு ரியல் மாட்ரிட் அணியில் இணைய நினைத்தார். ஆனால் அப்போது அவரை சமாதானம் செய்து ஒப்பந்தத்தை நீட்டிக்கவைத்தனர். இந்த முறையும் அவர் இதே திட்டத்தோடு தான் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டார். ரியல் மாட்ரிட்டும் பல ஆண்டுகளாக அவரை வாங்க முற்படுவதால் வேறு எந்த அட்டாக்கிங் வீரரையும் அவர்கள் பெரிய தொகைக்கு வாங்காமல் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு கேப்டன் கரீம் பென்சிமா வெளியேறியும் கூட அவர்கள் எந்த அட்டாகிங் வீரரையும் வாங்கவில்லை.

"ஒன்று புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடு, இல்லாவிட்டால் இந்த சீசனே கிளம்பிவிடு"

இந்நிலையில் பிஎஸ்ஜி அணி பெரும் சிக்கலுக்கு ஆளானது. எம்பாப்பே அணியில் இல்லாமல் போனால், அவர் வெளியேறுவதால் காசும் வராமல் போனால் அந்த அணி பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். அதனால் இன்னும் சில வீரர்களை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதனால் அவர்கள் எளிதாக எம்பாப்பேவை விட்டுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர். ஆகவே, 'ஒன்று புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடு, இல்லாவிட்டால் இந்த சீசனே கிளம்பிவிடு' என்று எம்பாப்பேவின் தரப்புக்கு பிஎஸ்ஜி நிர்வாகம் கூறிவிட்டது. அவர் ரியல் மாட்ரிட் அணியோடு அடுத்த சீசனில் இணைவதற்கு ஒத்துக்கொண்டுவிட்டார் என்று அந்த அணி நம்புகிறது.

Kylian Mbappe
Kylian MbappeTwitter

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வேறு அணிக்குப் போவது சாத்தியமான விஷயம் இல்லை. ரியல் மாட்ரிட் சுமார் 100 மில்லியன் யூரோ செலவு செய்து இளம் மிட்ஃபீல்டர் ஜூட் பெல்லிங்கமை வாங்கியிருக்கிறது. மற்ற பெரிய கிளப்களும் வேறு வீரர்களுக்குப் பெரும் செலவு செய்திருக்கின்றன. எப்படியும் எம்பாப்பேவுக்கு குறைந்தது 150 மில்லியன் யூரோவாவது பிஎஸ்ஜி எதிர்பார்க்கும். அதனால் வேறு எந்த அணியாலும் அவரை வாங்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாய்ப்பை பயன்படுத்தி உள்ளே நுழைந்த அல் ஹிலால் அணி!

இப்படிப்பட்ட தருணத்தில்தான் சவுதி அரேபிய அணியான அல் ஹிலால் கோதாவில் குதித்தது. பல முன்னணி ஐரோப்பிய வீரர்களை பெரும் தொகைக்கு சவுதி அணிகள் ஒப்பந்தம் செய்து வரும் நிலையில், எம்பாப்பேவை 259 மில்லியன் பவுண்டுக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது அல் ஹிலால். இது உலகில் எந்த கால்பந்து வீரருக்குமே கொடுக்கப்படாத டிரான்ஸ்ஃபர் தொகை. அதனால் அதை பிஎஸ்ஜி அணியும் ஏற்றுக்கொண்டது. எம்பாப்பே அந்த அணிக்குச் செல்ல தலையசைத்தால் எல்லாமே நடந்திருக்கும்.

அவரை ஒத்துக்கொள்ள வைக்க யாரும் எதிர்பாராத ஊதியத்தை அறிவித்தது அந்த அணி. அதாவது ஒரு ஆண்டுக்கு 700 மில்லியன் யூரோக்கள்! இதுவரை யாரும் நினைத்துக்கூடப் பார்த்திடாத ஒரு தொகை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் எம்பாப்பே ஒரு நொடிக்கு 22 யூரோக்கள் சம்பாதிப்பார். அதாவது ஒரு நொடிக்கு சுமார் 2000 ரூபாய்! இது கால்பந்தில் மட்டுமல்ல எந்த விளையாட்டிலுமே கொடுக்கப்படாத ஒரு ஊதியம்.

எல்லாம் நடந்தபிறகும் தொடரும் எம்பாப்வே - பிஎஸ்ஜி டிராமா!

இது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையுமே ஸ்தம்பிக்கவைத்தது. NBA வீரர் ஜியானிஸ் ஆன்டடேகோம்பு, 'அல் ஹிலால் நீங்கள் என்னை எடுத்துக்கொள்ளலாம். நான் எம்பாப்பே போலத்தான் இருக்கிறேன்' என்று ஜாலியாக ட்வீட் செய்ய அதுவும் கூட வைரல் ஆனது.

அமெரிக்கன் ஃபுட்பால் வீரர்கள் கூட சவுதி அரேபியா எங்களை வாங்கத் தயாராக இருக்கிறதா என்று காமெடியாக ட்வீட் செய்திருந்தார். அந்த அளவுக்கு உலகை உலுக்கியது அந்த அறிவிப்பு.

ஆனால் அந்த ஊதியம் என்பது வெறும் கால்பந்துக்கானது மட்டுமல்ல. கமர்ஷியல் உரிமைகளும் உட்பட்டது. எம்பாப்பேவின் புகைப்படத்தை எந்த நிறுவனம் உபயோகித்தாலும் அதற்கான தொகை முழுவதும் எம்பாப்பேவுக்கு செல்லும். இதையெல்லாம் சேர்த்தே அது 700 மில்லியன் யூரோ. இதுவும் ஒரேயொரு ஆண்டுக்காக மட்டும். அதன்பிறகு எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

Kylian Mbappe
Kylian Mbappe

பிஎஸ்ஜி அவரின் டிரான்ஸ்ஃபருக்கு ஒத்துக்கொண்டாலும் எம்பாப்பே அதற்கு ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை. "பணத்துக்காக ஒத்துக்கொள்ளவேண்டுமெனில் நான் பிஎஸ்ஜி அணியுடனேயே புதிய ஒப்பந்தத்தை கைழுத்திடுவேனே!" என்று கேட்டிருக்கிறார். அதனால் அவர் சவுதி போகப்போவதில்லை என்பது ஓரளவு தெளிவாகிறது. அதனால் அந்த டிராமா இப்போது ஓய்வதாகத் தெரிவதில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com