எவர்டன் அணி பிரீமியர் லீக்கின் நிதி விதிமுறைகளை மீறியதற்காக 10 புள்ளிகளை அபராதமாக பெற்றது. இது ஒரு பிரீமியர் லீக் அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாகும். இந்நிலையில் எவர்டன் அணி மீதான இந்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல எவர்டன் ரசிகர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும், எங்கே ஊழல் என்ற முழக்கங்கள் எழுப்பியும் போட்டியில் பங்கேற்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பல எவர்டன் ஆதரவாளர்கள் "ஊழல்" என்ற வார்த்தை மற்றும் பிரீமியர் லீக்கின் லோகோவைக் கொண்ட இளஞ்சிவப்பு அட்டைகளை கையில் ஏந்தி, "நாங்கள் இங்கிருந்து நகர்ந்து செல்ல மாட்டோம்" என்று கோஷமிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் "எங்கே அதிகாரம், பேராசை மற்றும் பணம் இருக்கிறதோ, அங்கே தான் ஊழல் இருக்கிறது" என்ற ஒரு பெரிய பேனர் எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் நடந்த ஆட்டத்தில், போட்டி தொடங்கிய மூன்றே நிமிடத்தில் 19 வயது மான்செஸ்டர் இளம் வீரர் ஒட்டுமொத்த எவர்டன் ரசிகர்களையும் மௌனத்தில் ஆழ்த்தினார்.
கூடிசன் பார்க்கில் நடந்த பிரீமியர் லீக் மோதலில் எவர்டன் மற்றும் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு விறுவிறுப்பான மோதலில் எவர்டன் அணிக்கு எதிராக ஒரு நம்பமுடியாத தலைக்கு மேல் கிக் அடித்து கோலடித்த அலெஜான்ட்ரோ கர்னாச்சோ, மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களை மட்டுமில்லாமல் உலகத்தில் இருக்கும் அனைத்து கால்பந்து ரசிகர்களையும் மிரட்சியில் ஆழ்த்தினார். கர்னாச்சோவின் அபாரமான பை-சைக்கிள் கோல் மூதல் யுனைடட் அணி 3-0 என அபாரமான வெற்றியை பெற்றது.
பிரீமியர் லீக் வரலாற்றில் தலைசிறந்த கோல்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த கோல் மூலம், இதற்கு முன் இதை செய்துகாட்டிய ரூனி மற்றும் கிறிஸ்டியானா ரொனால்டோவை நினைவுப்படுத்தியுள்ளார் கர்னாச்சே. ரூனி 2011-ல் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ஓவர்ஹெட் கிக்கை அடித்து ஓல்ட் ட்ராஃபோர்டில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற உதவினார். பின்னர் 2018ஆம் ஆண்டு கிறிஸ்டினோ ரொனால்டோவும் ஒரு பை-சைக்கிள் கிக் மூலம் அசத்தியிருந்தார். கோல் அடித்த பின் ரொனால்டோவைப் போல் கர்னாச்சே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
19 வயதேயான அலெஜான்ட்ரோ கர்னாச்சோவின் அபாரமான திறமையை புகழ்ந்துள்ள மான்செஸ்டர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உலகத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கர்னாச்சோ வருவார் என புகழ்ந்துள்ளனர். கால்பந்து ரசிகர்கள் கர்னாச்சோவை ரொனால்டோவுடன் ஒப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.