கால்பந்தாட்டத்தின் என்றைக்குமான ஜாம்பவானாக பார்க்கப்படும் பீலே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரை எப்படி காட் ஆஃப் த கிரிக்கெட் என்று அழைப்பார்களோ அதேபோல், கால்பந்தாட்ட உலகின் கடவுளாக பார்க்கப்படுபவர் பீலே. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான பீலே, கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என போற்றப்படுகிறார். பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்பதாகும்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பீலேவுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், பெருங்குடலில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சமீப காலமாக மிகவும் பலவீனமான உடல்நலத்தால் அவர் அவதிப்பட்டு வந்தார். அதனைதொடர்ந்து, பீலேவுக்கு உடல் பாதிப்பு அதிகமானதால் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பீலேவின் உடல்நிலை குறித்து அவரது மகள் கெல்லி நஸிமென்டோ, 'பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார்’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கீமோதெரபி எனப்படும் மருந்து சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று உயிர் வாழ்தலின் கடைசி கட்டத்தில் அவர் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மருந்து சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலே, அவர் சீரியஸான நிலையில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்லட்டிவ் எனப்படும் நோய் தடுப்பு சிகிச்சையில் தற்போது அவர் உள்ளார்.
பீலேவின் சாதனைகள்:
பிரேசில் நாட்டு அணிக்காக 1958, 1962, 1970- களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பீலே பெற்றுள்ளார். 17 வயதில் உலகக்கோப்பையை வென்றவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர் என்று பல்வேறு சாதனைகள் படைத்த பீலே, உலக அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களை அடித்து சாதனையையும் புரிந்துள்ளார் பீலே. பின் பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
பீலே பிரேசிலின் சாண்டாஸ் ஃபுட்பால் கிளப்பிற்காக 1956 தொடங்கி 1974 வரை 757 ஆட்டங்களில் விளையாடிய உள்ளார். அதன் மூலம் 643 கோல்களை அந்த கிளப் அணிக்காக அவர் அடித்திருந்தார். அது தான் கடந்த சில நாட்கள் வரை ஒரே அணிக்காக தனியொரு வீரர் அடித்திருந்த அதிகபட்ச கோலாக இருந்தது. மெஸ்ஸி முறியடிக்கும்வரை இதுவே சாதனையாக இருந்தது.