மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய மேவெதர் -மெக்கிரிகோர் இடையேயான குத்துச்சண்டை போட்டியில், மேவெதர் வென்று உலகச் சாதனைப் படைத்தார்.
இந்த உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற இந்தப்போட்டி இந்திய நேரப்படி, காலை ஒன்பதரை மணியளவில் தொடங்கியது. போட்டியை ஒட்டி லாஸ்வேகாஸ் நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது.
ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று மீண்டும் களமிறங்கிய அமெரிக்க நாயகன் மேவெதருக்கு இது 50-வது போட்டி. இதுவரை களம் கண்ட 49 போட்டிகளிலும் அவரை யாரும் வென்றதில்லை.
இந்தப் போட்டியுடன் மீண்டும் ஓய்வு அறிவிப்பை வெளியிட இருக்கும் மேவெதர், 50-வது வெற்றியை சுவைப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். எதிர்பார்த்தது போலவே அவர் மெக்கிரிகோரை வென்று சாதனை படைத்தார். இதையடுத்து தொடர்ந்து 49 போட்டிகளில் வென்றுள்ள சகநாட்டு வீரர் ராக்கி மார்சியானோவின் சாதனையை, மேவெதர் முறியடித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், மேவெதருக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. தோற்ற மெக்கிரிகோருக்கு சுமார் 650 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும்.
இந்தப்போட்டியை மையமாக கொண்டு பல நூறு கோடி ரூபாய்க்குமேல் பெட்டிங் நடைபெற்றுள்ளன. இந்தப்போட்டியை காண, 1,300-க்கும் மேற்பட்டோர் தனி விமானங்களில் லாஸ் வேகாஸ் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டி 220 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.