ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தோனி கூறும்போது, ’ஃபைனலில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். திட்டம் வைத்திருப்பதெல்லாம் பயிற்சியாளர் ஃபிளம்மிங்தான். நான் அதை செயல்படுத்துகிறேன். இதற்காக ஃபிளமிங்கிற்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. பிளே ஆப் சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங்கை பந்துவீசச் சொல்லாத து ஏன் என்று கேட்கிறார்கள்.
என் வீட்டில் நிறைய கார்களும் பைக்குகளும் இருக்கிறது. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் ஓட்டுவதில் லை. அதே போலதான். அணியில் ஆறு, ஏழு பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, யார் பேட்டிங் செய்கிறார், அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையைப் பொறுத்துதான் பந்துவீச அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். கடந்த போட்டியில் ஹர்பஜன் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை’ என்றார்.
மேலும் அவரிடம் கேட்டபோது, ’ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரும் சிறந்த இந்திய வீரர்களை உருவாக்குகிறது. இந்த வருடம் அப்படி சிறந்த வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்’ என்றார்.