13 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலே ரசிகர்கள் பெரிதும் விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்மை இந்தியன்ஸ் இடையே நடைபெறுகிறது. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு பின்பு, எந்த சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்காத தோனி இப்போட்டியில் களமிறங்குவதை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐபிஎல் கோப்பையை மும்பை 4 முறையும், சிஎஸ்கே 3 முறையும் கைப்பற்றியுள்ளது. எனவே ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இவ்விரு அணிகளும் ரசிகர்களை பொறுத்தவரை பரம எதிரிகள்.
இதுவரை 12 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. ஒவ்வொரு இறுதிப்போட்டியும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல்தான் முடிந்து இருக்கிறது. இப்போது 13 ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிகள் குறித்து கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம்.
2008: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்கஸ்
முதல் ஐபிஎல் சீசன் பிரமாண்டமாக நடந்தது. முதல் சீசனின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றிப் பெற்றது. மிகவும் பரபரப்பாக முடிந்த அந்தப் போட்டியில் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது ராஜஸ்தான்.
2009: டெக்கான் சார்ஜர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால், 2ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இறுதி ஆட்டத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், அனில் கும்ப்ளே தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் ஹைதராபாத் அணி விளையாடியது. 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து டெக்கன் சார்ஜர்ஸ். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
2010: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை நழுவவிட்ட சிஎஸ்கே, மூன்றாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று மும்பையுடன் மோத தயாரானது. வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
2011: சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
கடந்தாண்டு ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே, இந்த சீசனிலும் இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதிப் போட்டியில் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது சிஎஸ்கே.
2012: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐந்தாவது ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே. இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து முதல் முறையாக கோப்பையை வென்றது.
2013 : சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
ஆறாவது ஐபிஎல் தொடரில் 5 ஆவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது சிஎஸ்கே. அப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஏழாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி 19.3 வது ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
2015: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
எட்டாவது ஐபிஎல் தொடரில் 6 ஆவது முறையாக சிஎஸ்கே இறுதி ஆட்டத்தில் நுழைந்தது. இப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக மும்பை அணி கோப்பையை வென்றது.
2016: சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2017: மும்பை இந்தியன்ஸ் - புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்
பத்தாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் புனே அணியும் மோதின. ஸ்மித் தலைமையிலான அணியில் தோனி இடம்பெற்றிருந்தார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது புனே அணி. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 3வது முறையாக கோப்பையை வென்றது.
2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
இரண்டாண்டு தடைக்கு பின்பு 2018 இல் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கியது சிஎஸ்கே. 11வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2019: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மீண்டும் சிஎஸ்கே இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இரண்டாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. 1 ரன்னில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. மும்பை அணி 4 ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியனானது.