ஐபிஎல் 2021: ஏலம் எடுக்க வாய்ப்பில்லாத சில வீரர்கள்!

ஐபிஎல் 2021: ஏலம் எடுக்க வாய்ப்பில்லாத சில வீரர்கள்!
ஐபிஎல் 2021: ஏலம் எடுக்க வாய்ப்பில்லாத சில வீரர்கள்!
Published on

சென்னையில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடிய 5 வீரர்களை இம்முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 14-ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கடந்தக் காலங்களில் சிறப்பாக விளையாடிய 5 முக்கிய வீரர்களை இம்முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவர்கள் எந்தெந்த வீரர்கள் என்று சற்றே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

லியாம் பிளங்கட்

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லியாம் பிளங்கட் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை 2019 ஆம் ஆண்டு விளையாடினார். அதன்பின்பு அவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் தொடர்களில் 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அணிக்காக விளையாடினார். மொத்தம் 7 போட்டிகளில் அவர் விளையாடி அசத்தினார். ஆனால் அதன் பின்பு டெல்லி அணி அவரை பயன்படுத்தவில்லை. இந்தாண்டு பிளங்கட் ஏலத்தில் இருக்கிறார். ஆனால் அவரை எந்த அணியும் எடுக்காது என்றே கூறப்படுகிறது.

கேதர் ஜாதவ்

கடந்த ஐபிஎல் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தின் காரணமாக இந்தாண்டு கேதர் ஜாதவை அணியிலிருந்து விடுவித்தது சிஎஸ்கே. 2019 ஏலத்தில் ரூ.7.8 கோடிக்கு கேதர் ஜாதவை ஏலம் எடுத்தது. 2019 சீசனில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். ஆனால் கடந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 62 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தாண்டு ஏலத்துக்கு முன்பாகவே ராஜஸ்தான் ராயல்ஸின் ராபின் உத்தப்பாவை வாங்கியது சிஎஸ்கே. சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவை யாரும் வாங்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.

ஜேசன் ராய்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ்க்கு விளையாடவில்லை இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய். ஐபிஎல் போட்டிகளில் ஏற்கெனவே குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அதிரடி ஆட்டத்தால் அசரடிக்கும் அசாத்திய திறமைக்காரரான ஜேசன் ராயை ரூ.1.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தவர் ஜேசன் ராய். ஆனால் பல மாதங்களாக தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் அவரின் பங்களிப்பு இல்லை என்பதால் ஜேசன் ராயை எந்த அணியும் ஏலம் எடுக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஹர்பஜன் சிங்

கடந்த 2018 முதல் 2020 வரை சென்னை அணிக்காக விளையாடியவர் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். கடந்த ஐபிஎல் தொடரில் சொந்தக் காரணங்களுக்காக சென்னை அணிக்காக விளையாடவில்லை. இதனையடுத்து 40 வயதான ஹர்பஜன் சிங்கை சென்னை அணி நிர்வாகம் விடுத்தது. ஒரு காலத்தில் மும்பை அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார் ஹர்பஜன். இந்த ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங்குக்கு அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காதது, கடந்த ஐபிஎல்லில் விளையாடதது ஆகியவை ஹர்பஜனுக்கு மைனசாக இருப்பதால் இம்முறை எந்த அணியும் ஏலம் எடுக்காது என்றே தெரிகிறது.

மொயின் அலி

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுபவர் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. கோலியின் வற்புறுத்தல் காரணமாக ஆர்சிபி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் மொயின் அலி. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை மொயின் அலியை அணியிலிருந்து விடுவித்தது ஆர்சிபி. சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தினாலும் மொயின் அலிக்கு எந்த அணியிலும் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com