உலகக்கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி எளிதில் வெற்றியை ஈட்டியது
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற போட்டியில் சர்வதேச தரநிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, உலகக்கோப்பையில் முதன்முறையாக விளையாடும் பனாமா அணியை எதிர்த்து விளையாடியது. ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் ஆட்டத்தின் முதல் பாதியில் அந்த அணியின் கோல் முயற்சிகள் கைகொடுக்கவில்லை.
ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியவுடனே பெல்ஜியம் அணி கோல் அடித்தது. 47 ஆவது நிமிடத்தில் அனுபவ வீரர் ட்ரையஸ் மெர்ட்டன்ஸ் நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார். 69 ஆவது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு பெல்ஜியம் அணிக்கான இரண்டாவது கோலை அடித்ததார். டி புருய்ன் கடத்திக் கொடுத்த பந்தை தலையில் முட்டி கோல் வலைக்குள் அவர் தள்ளினார். 75 ஆவது நிமிடத்தில் லுகாகு மற்றுமொரு கோல் அடித்தார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் பெல்ஜியம் அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.