ஐபிஎல் போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தனது வலைப் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 8 அணி வீரர்களும் துபாய் சென்றுவிட்டனர். கொரோனா விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக் கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆர்சிபி அணியின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்துள்ளது. அனைத்து வீரர்களும் மைதானத்துக்கு சென்று தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அனைத்து வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மைதானத்தில் களமிறங்கி 5 மாதமாகிறது. ஆனால் இப்போது வலைப் பயிற்சி செய்யும்போது 6 நாள்கள் ஆனது போலத்தான் இருக்கிறது. சக வீரர்களுடன் பயிற்சியை மேற்கொண்டது மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.