ஏழு ஆண்டுகால தடைக்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் கேரளாவின் வேகப்புயல் ஸ்ரீசாந்த். இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் சர்வதேச கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட் விளையாட 7 ஆண்டுகள் தடையும் பெற்றவர். கடந்த 2020 செப்டம்பரில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிந்திருந்தாலும் கொரோனா தொற்று அவரது கம்பெக்கை கொஞ்சம் தள்ளிப்போட்டது.
ஒருவழியாக இப்போது கேரள அணிக்காக சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் விளையாடி வருகிறார். அவரது கம்பேக் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன. அதே நேரத்தில் எதிரணி வீரர்களோடு இந்த தொடரிலும் ஸ்ரீசாந்த் வார்த்தை போரில் ஈடுபட்டார். இருப்பினும் 37 வயதிலும் ஸ்ரீசாந்த் ஃபிட்டாக பந்து வீசி வருவதால் அவர் வரும் 2021 ஐபிஎல் தொடரில் விளையாடலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அவரும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவே தெரிகிறது. அனைத்தும் கூடி வந்தால் 2021 ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரீசாந்த் போணி ஆகலாம். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் ஸ்ரீசாந்தை ஏலத்தில் எடுக்க முன்வரலாம்.