பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபிராஸ் அகமது நீக்கப்பட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மோசமாக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, லீக் சுற்று முடிவிலேயே வெளியேறியது. இதனால் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டார். சர்ஃபராஸ் அகமதுவும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த தொடருக்கான கேப்டனாக சர்ஃபராஸையே நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால், இலங்கையின் இரண்டாம் நிலை வீரர்கள் பங்கேற்ற டி-20 தொடரில், பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து சர்ஃபராஸ் அகமது, டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, அசார் அலி டெஸ்ட் கேப்டனாகவும் பாபர் ஆசம் டி-20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய கேப்டன்களுக்கு சர்ஃபராஸ் அகமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேப்டன் மாற்றப்பட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
‘’பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்பது பஞ்சாப் (பாகிஸ்தான்) கிரிக்கெட் வாரியமாக மாறிவிட்டது. அங்குள்ள வீரர்கள் மட்டுமே அணியின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர்’ என்று பலர் ஆதங்கங்களை கொட்டியுள்ளனர். ’பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் அரசியலுக்கு இது சரியான உதாரணம்’ என்று சிலரும், ஊழல் பெருத்துவிட்டது என்று சிலரும் விளாசியுள்ளனர்.
‘அசார் அலி, பணம் கொடுத்துதான் இந்த பொறுப்பை பெற்றிருப்பார்’ என்று சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் இருக்கிற ஃபார்முக்கு இந்தப் பொறுப்பை எப்படி கொடுத்தார்கள் என்று சில ரசிகர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், அசார் அலி உட்பட பல முன்னணி வீரர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.