”இந்திய மண்ணில் எப்படியாவது டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்”.. டூப்ளிகெட் அஸ்வின் உதவியுடன் ஆஸி.!

”இந்திய மண்ணில் எப்படியாவது டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்”.. டூப்ளிகெட் அஸ்வின் உதவியுடன் ஆஸி.!
”இந்திய மண்ணில் எப்படியாவது டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்”.. டூப்ளிகெட் அஸ்வின் உதவியுடன் ஆஸி.!
Published on

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டர் அஸ்வினை சமாளிப்பதற்கு ஏதுவாக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்திய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 9ஆம் தேதி, நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில், இரண்டு அணிகளும் போட்டிக்காக ஆயத்தமாகி வருகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதிகபட்ச வாய்ப்பிருக்கும் இரண்டு அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இருப்பதால், இந்த இரு அணிகளுக்குமிடையேயான இந்த டெஸ்ட் தொடரானது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1969லிருந்து ஒருமுறை மட்டுமே இந்தியாவை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது!

1969-1970 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளில் வென்றும், ஒரு போட்டியை டிரா செய்தும் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது, கில்கிறிஸ்ட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. அதற்கு பிறகு 18 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லமுடியாமல் தான் இருந்து வருகிறது.

ஒன்றுக்கு இரண்டு என திருப்பி கொடுத்த இந்தியா!

2004ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தியிருந்த நிலையில், இந்திய அணியால் ஒரு டெஸ்ட் தொடரை கூட ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிபெற முடியாத நிலையே இருந்து வந்தது. அதனை பல ஆண்டுகளுக்கு பிறகு நினைவாக்கி தந்த பெருமை, கேப்டன் விராட் கோலியையே சாரும்.

2018-2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி வரலாறு படைத்து அசத்தியது. இந்நிலையில் 2020/21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அஜிங்யா ரஹானே தலைமையில் மீண்டும் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, ஆஸ்திரேலியா ஒருமுறை வென்றதற்காக இரண்டாக திருப்பி கொடுத்து மிரள வைத்தது.

இந்நிலையில் இந்தியாவை பழிதீர்க்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பிரைம் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்ளும் விதமாக, அஸ்வினை போலவே அப்படியே பந்துவீசும் ஒரு ஆஃப் ஸ்பின்னரை கண்டுபிடித்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அஸ்வினை எதிர்கொள்ள உதவும் போலி-அஸ்வின்!

21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரான இவர், அப்படியே ரவிச்சந்திரன் அஸ்வின் போலான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். இவரது பந்துவீச்சை இன்ஸ்டாக்ராமில் கண்ட ஆஸ்திரேலிய அணி, வலைபயிற்சியில் ஈடுபட மகேஷ் பிதியா உதவியை நாடியது.

மகேஷ் பிதியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரோடா அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். பெங்களூரில் உள்ள பயிற்சி முகாமிற்கு சென்றுள்ள மகேஷ், அங்கு ஸ்டீவ் ஸ்மித், லபுசனே மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு பந்துவீச, அவர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய ஸ்பின்னர்களின் “ஸ்லைடு ஸ்பின்” எதிர்கொள்வது சவாலானாது-ஆஸ்திரேலியா பயிற்சியாளர்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு குறித்து முன்னர் பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர், “இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று பேரையும் புதிய பந்தில் எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்று. அவர்கள் வீசும் “ஸ்லைடு ஸ்பின்”ஆனது ஆடுகளத்தின் மேற்பரப்பில் இருந்து விரைவாக வேரியேசனோடு வரும் பந்துவீச்சாகும். அதை பெரும்பாலும் புதிய பந்துகளில் எதிர்கொண்டு விளையாடுவது என்பது, பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். எனவே அதற்கான பயிற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

எதனால் ஆஸ்திரேலிய அணியால் அதற்கு பிறகு 2004ற்கு பிறகு வெல்ல முடியவில்லை?

ஆஸ்திரேலிய அணியால் ஏன் 2004க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்றால், அப்போது ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்னே என்ற ஒரு காலத்திற்குமான சுழற்பந்துவீச்சாளர் இருந்தார். அதற்கு பிறகு வார்னே போன்ற ஒரு ஸ்பின்னர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாததால் தான் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் ஆஸ்திரெலியாவால் தொடரை வெல்லமுடியாமல் போவதற்கு பெரிய காரணமாக இருந்து வருகிறது.

வார்னே போன்ற வீரர் இருந்துவிட்டால் ஆஸ்திரேலியாவால் இந்திய மண்ணில் வெற்றியடைய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்றே கூற முடியும், ஏனென்றால் மறுபுறம் இந்திய அணியில் தொடர்ச்சியாக ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்துகொண்டே இருக்கின்றனர். முன்னதாக இந்திய அணியில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருந்துவந்தனர். தற்போது அணியில் அஸ்வின் இருந்து வருகிறார். ஒருவேளை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை வெல்ல முயற்சிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com