தென்னாப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் காயத்தால் பாதிக்கப்பட்டதற்கு ஐபிஎல் போட்டிகளே காரணம் என்று கேப்டன் டு பிளிசிஸ் சாடியுள்ளார்.
தென்னாப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். தோள் பட்டை காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத நிலையில், நேற்று அவர் விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான போட்டிக்கு முன்பு நேற்று கேப்டன் டு பிளிசிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அணியில் இருந்து ஸ்டெயின் விலகியது குறித்தும், காயத்தால் வீரர்கள் பாதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளித்த டு பிளிசிஸ், ஸ்டெயின் காயத்தால் பாதிக்கப்பட்டதற்கு ஐபிஎல் போட்டிகளே காரணம் என்று தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடாமல் இருந்திருந்தால், தற்போது போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பார் என்றும் டு பிளிசிஸ் கூறினார்.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இரண்டு போட்டிகளில் ஸ்டெயின் விளையாடி இருந்தார். மொத்தம் 8 ஓவர்கள் மட்டுமே அவர் வீசி இருந்த போதும் தோள் பட்டை காயத்தால் அவர் அவதிப்பட்டார்.