இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் வலுவான பேட்டிங் வரிசையை சிதைத்தவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இந்தப் போட்டியில் அவர் 24 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவின் சைனா மேன் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் குழம்பிப்போயினர். இந்தப் போட்டியில் மேன் ஆஃப் தி மாட்ச் விருதும் குல்தீப் யாதவ்க்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து குல்தீப் யாதவ் பேசியது "ஆடுகளம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய சாதகமும் இல்லை பாதகமும் இல்லை. அதனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு வேகம் குறைத்து பந்து வீசினால் திணறுவார்கள் என்று நினைத்தேன். அப்படிதான் பந்து வீச வேண்டும் என ஏற்கெனவே பிளான் செய்திருந்தேன். அதன்படியே நடந்தது விக்கெட்டும் வீழ்ந்தது."
இங்கிலாந்து அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன்களான மார்கன், ஜானி பார்ஸ்டவ், ஜோ ரூட் ஆகியோரை ஒரே ஓவரில் அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ். அது குறித்து பேசுகையில் "எனக்கு முன்பு சேஹல் பந்து வீசினார். அப்போது தெரிந்தது, இந்த ஆடுகளத்தில் ஸ்பின் அவ்வளவாக எடுபடவில்லை என்று. விக்கெட்டை தொடர்ந்து எடுக்க வேண்டுமென்றால் வேகத்தை மாற்றி மாற்றி வெவ்வேறு லெந்துகளில் பந்து வீச வேண்டும். அதையே செய்தேன்" என்றார் அவர்.
தோல்வி குறித்து கூறிய இங்கிலாந்து கேப்டன் மார்கன் "தொடக்கம் சிறப்பாக அமைந்தது. மொத்த டோட்டலில் இருந்து 30, 40 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால் வெற்றிப் பெற ஏதுவாக இருந்து இருக்கும். குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இனி வரும் ஆட்டங்களில் குல்தீப்பை எதிர்கொள்வது எப்படி என தெரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.