யூரோ 2020: பரபரப்பை பற்ற வைத்துள்ள லீக் போட்டிகள்

யூரோ 2020: பரபரப்பை பற்ற வைத்துள்ள லீக் போட்டிகள்
யூரோ 2020: பரபரப்பை பற்ற வைத்துள்ள லீக் போட்டிகள்
Published on

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளில் குரோஷியா, செக் குடியரசு, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான போட்டிகள் டிராவில் முடிந்தன. ஸ்லோவாக்கியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது.

கால்பந்து ரசிகர்களுக்கு தினம் தினம் சுவாரஸ்யாமாக விருந்து படைத்து வரும் யூரோ கோப்பை தொடரில், சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றன.

ஈ பிரிவில் நடைபெற்ற ஸ்லோவாக்கியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 77 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்வீடன் அணியின் ஃபோர்ஸ்பெர்க் கோலாக மாற்றினார். அதன் பின்னர் ஸ்லோவாக்கியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தடுத்து, ஸ்வீடன் அணி வெற்றியை வசப்படுத்தியது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா, செக் குடியரசு அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37 ஆவது நிமிடத்தில் செக் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பேட்ரிக் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச்செய்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட குரோஷிய அணி, இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே இவான் பெரிசிக்கின் மூலம் ஒரு கோலை வசப்படுத்தியது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

நள்ளிரவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமின்றி நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நூலிழையில் கோல் வாய்ப்புகளை தவறவிட்டது. ஸ்காட்லாந்து அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளும் பலனளிக்காததை ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com