கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரண்டன் மெக்கலமுடன் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக அந்த அணியின் ஆலோசகரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான டேவிட் ஹஸி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள பிரண்டன் மெக்கலமுடன் பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டேவிட் ஹஸி "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவருடன் ஏற்கெனவே இணைந்து விளையாடியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இப்போது புதிய பொறுப்பில் மெக்கல்லம் இணைந்திருக்கிறார். அவருடன் பணியாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.