தோனிக்கு அடுத்துள்ள இடம் யாருக்கு என்பதில் பெரும் போட்டியே இருந்தது என்பதை மறுக்க முடியாது என்று இந்திய அணி வீரர் பார்த்திவ் படேல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் சிறுவயதிலேயே டெஸ்ட் அணியில் விளையாடியவர். தோனியின் வருகைக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பார்த்திவுக்கு அரிதாகவே கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பார்த்திவ் படேல் கடந்தாண்டு ஒரு பேட்டியில் "தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்துக்கு முன்பே நாங்கள் எல்லாம் (அப்போதைய விக்கெட் கீப்பர்கள்) கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அப்படிச் சரியாக நாங்கள் விளையாடி இருந்தால் இன்று தோனியால் இடம் கூட பிடித்திருக்க முடியாது. முதலிடமும் கிடைத்திருக்காது.ஆனால், கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. பலர் என்னிடம் வந்து நீ பிறந்த ஆண்டு சரியில்லை, நீ சில ஆண்டுகள் முன்கூட்டியே அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்போ பிறந்திருக்க வேண்டும் எனக் கூறினர்" எனப் பேசியிருந்தார்.
இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் வீடியோ கால் மூலம் நேர்காணல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் Rediff.com இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார் பார்த்திவ் படேல், அதில் "இப்போதும் எப்போதும் நேரத்துக்குத் தகுந்த சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழலிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள நினைக்கக் கூடாது. அப்போதிருந்த சூழலில் தோனி கேப்டனாக இருந்தார். அப்போது அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கும் பெரும் போட்டியே இருந்தது. அந்தச் சூழலை நான் ஒத்துக்கொண்டேன். அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, எனக்கான பாதைகளை நானே வகுத்துக்கொண்டேன், அது நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏதுவாக அமைந்தது" எனக் கூறியுள்ளார்.