’தொடர்ந்து தவறு செய்துகொண்டிருந்ததால் தோல்வியைத் தழுவினோம்’ என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பாஃப் டு பிளிசிஸ் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் பின் தங்கியது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன்களைச் சேர்க்கத் தடுமாறியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே சுழல் பந்துவீச்சாளர் நதீம், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அந்த அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
போட்டிக்குப் பிறகு பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ், இந்திய அணியை பாராட்டினார். அவர் கூறும்போது, ‘’இந்த தொடர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதில் சில நல்ல அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது தடம் மாறி போய்விட்டது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அதிக தவறுகளை இழைத்தோம். அதற்காக, இந்திய அணிக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இரக்கமின்றி எங்கள் அணியை மிரட்டிவிட்டார்கள். சுழல் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டது. இந்திய துணைகண்டத்தில் அந்த அணியை வெல்வது கடினம். 2015 ஆம் ஆண்டு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச்கள் இருந்தன. அதை மனதில் வைத்து நாங்கள் செயல்பட்டால், அதற்கு மாறாக எல்லாம் நடந்தன. பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சிறப்பாக இருந்தது’’ என்றார்.