யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற டென்மார்க் மற்றும் இத்தாலி அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த முதல் போட்டியில் பலம்வாய்ந்த டென்மார்க் அணியை எதிர்த்து வேல்ஸ் அணி களம்கண்டது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் டென்மார்க் அணி 1 கோல் அடித்து 1:0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
பின்னர், இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஆனால் டென்மார்க் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களை தாண்டி வேல்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் டென்மார்க் அணி மேலும் 3 கோல்கள் அடித்து 4:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
இதைத்தொடர்ந்து இத்தாலி மற்றும் ஆஸ்டிரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல்பாதி கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது. இரண்டாவது பாதியில் இத்தாலி அணி இரண்டு கோல்களும், ஆஸ்ரியா அணி ஒரு கோலும் அடித்தது. இறுதியில் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற இத்தாலி அணி காலிறுதிக்குள் நுழைந்தது.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து செக் குடியரசு அணி களம்காண்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து இரவு 12.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து பெல்ஜியம் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. நாக் அவுட் முறைப்படி நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.