இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் பிறந்தவரான இயன் மோர்கன், அந்நாட்டு கிரிக்கெட் அணியில் முதலில் அறிமுகமானார். கடந்த 2006 முதல் 2009-ம் ஆண்டு வரையில் அயர்லாந்து நாட்டின் அணிக்காக விளையாடியுள்ளார் இயன் மோர்கன். கடந்த 2004-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் தேர்வான இயான் மோர்கன், அந்தத் தொடரில் அயர்லாந்து அணியின் அதிகப்பட்ச ரன்கள் எடுத்த வீரராக சாதனைப் படைத்தார். இரண்டு வருடங்கள் கழித்து 2006-ம் ஆண்டில் 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கேப்டனாக அயர்லாந்து அணிக்கு தலைமை தாங்கினார். அந்தத் தொடரில் அதிகப்பட்ச ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
அதன்பிறகு, அயர்லாந்து அணியின் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இயன் மோர்கன், அந்த அணிக்காக 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து விளையாடினார். எனினும், 13 வயது முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதே குறிக்கோளாக கொண்ட இயன் மோர்கன், 2009-ம் ஆண்டு முதல் 2022 ஜூன் மாதம் ஓய்வுபெறும்வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். இதில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியின் இங்கிலாந்து கேப்டன் குக் நீக்கப்பட்டு, இயன் மோர்கன் கேப்டனாக பதவியேற்றார். ஏனெனில் இரண்டு மாதங்களில் ஐசிசியின் உலகக் கோப்பை போட்டி துவங்க இருந்ததால், நல்ல பார்மில் இருந்த இயன் மோர்கன் கேப்டனாக பதவியேற்றுக் கொண்டார்.
கிரிக்கெட் போட்டியை கண்டுப்பிடித்தாலும், கடந்த 1975-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லாத இங்கிலாந்து அணியை, கடந்த 2019-ம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் உலகக் கோப்பையை முதன்முதலில் ஏந்தியது.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்த இயன் மோர்கன், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாப்ரிக்கா டி20 லீக்கில் பேர்ல் ராயல்ஸ் அணிக்காக இயன் மோர்கன் விளையாடியிருந்தார். இந்த நிலையில்தான் 36 வயதான இயன் மோர்கன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
“அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு இது. நான் நேசிக்கும் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுவே சரியான நேரம்” என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், வர்ணனையாளராக, பயிற்சியாளராக கிரிக்கெட் விளையாட்டை தொடருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மோர்கன் இதுவரை 248 போட்டிகளில் விளையாடி 7701 ரன்கள், 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 ரன்கள், டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்கள் எடுத்துள்ளார்.