இங்கிலாந்து, நியூஸிலாந்துக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ராஸ் டைலர் 43, கொலின் மன்ரோ 29, குப்தில் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் அகர் 3, கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஆண்ட்ரிவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர் 25, ஆர்ஸி ஷார்ட் 50 ரன்கள் குவித்தனர். மேக்ஸ்வெல் 20 ரன்களுடனும், ஆரோன் ஃபிஞ்ச் 18 ரன்களுடனும் களத்தில் இருக்க, 14.4 ஓவர்கள் அணியின் ஸ்கோர் 121 ஆக இருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழையால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் முத்தரப்பு டி20 போட்டியின் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.