கைவிட்டுபோன பிரகாசமான வெற்றி வாய்ப்பு.. இந்தியா செய்த இந்த 5 தவறுகள்தான் காரணம்!

கைவிட்டுபோன பிரகாசமான வெற்றி வாய்ப்பு.. இந்தியா செய்த இந்த 5 தவறுகள்தான் காரணம்!
கைவிட்டுபோன பிரகாசமான வெற்றி வாய்ப்பு..  இந்தியா செய்த இந்த 5 தவறுகள்தான் காரணம்!
Published on

இந்தியா செய்த இந்த 5 தவறுகளால்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரையும் சமன் செய்தது. அந்த 5 தவறுகள் இதோ!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று முடிந்திருக்கிறது. ரூட், பேர்ஸ்டோ அதிரடியால் போட்டியை வென்று தொடரை சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் இந்தியாவுக்கு இருந்தபோதிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. 3-1 என கைப்பற்ற வேண்டிய தொடரை பறிகொடுத்திருக்கிறது. ஒரே ஆறுதல் இங்கிலாந்து தொடரை வெல்லவில்லை என்பதே!

அந்த 5 தவறுகளை இப்போது பார்க்கலாம்!

1. டெஸ்ட் போட்டியில் 3வது நாளில் அதிரடி ஆட்டமா?

132 ரன்கள் முன்னிலை பெற்று மூன்றாவது நாளில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி கையில் எடுத்திருக்க வேண்டியது “தடுப்பாட்ட யுக்தியைதான்”. ஆனால் யாருடைய அறிவுரையை இந்திய பேட்டர்கள் கேட்டார்களோ! புஜாரா தவிர மற்ற அனைவரது பேட்டிங்கிலும் வெளிப்பட்டது “அதிரடி பாணி”. இதை சரியாக உணர்ந்த இங்கிலாந்து பவுலர்கள் மிகச் சரியாக வியூகம் அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

2. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறும் வீரர்கள்:

சுப்மான் கில், ஹனுமான் விஹாரி இருவருக்கும் கிடைத்த முக்கிய வாய்ப்பு இந்த டெஸ்ட் போட்டி. ஆனால் அவர்கள் இருவரும் ஒரு இன்னிங்சில் கூட 20 ரன்களை கூட தாண்டவில்லை. நிலைத்து ஆட முயற்சித்த புஜாராவுக்கும் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. இவர்களது சீரற்ற ஆட்டம் புஜாராவை நெருக்கடிக்கு தள்ள முதல் இன்னிங்சில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது இன்னிங்சில் அவர் சுதாரித்து ஆடியதால் மட்டுமே கவுரவமான ஸ்கோரை இந்தியா இலக்கு ஆக்கியது. இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களை மௌனமாக்கி இருக்கிறார்கள். புஜாராவுடன் உறுதுணையாக ஒருவர் ஆடியிருந்தால் கூட இந்தியாவின் தோல்வியை தவிர்த்திருக்கலாம்.

3. என்ன சொல்வது கோலி?

இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டது வேறு யாருமல்ல கோலிதான்! முதல் போட்டியில் பல வீரர்கள் மோசமாக அவுட்டாகி கடும் விமர்சனங்களை சந்தித்தபின், கோலியின் படை வீறுகொண்டு எழுந்தது. நடைபெற்ற 4 போட்டிகளில் 2 போட்டிகளை 150க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமாக வென்று இங்கிலாந்தை துவம்சம் செய்தது. ஆக, இது அவர் வென்றிருக்க வேண்டிய தொடர்! 5வது போட்டியை டிரா செய்திருந்தால் கூட தொடர் இந்தியா வசம் ஆகியிருக்கும்.

இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் கோலி சதம் அடிக்காதபோதும் அரைசதம் விளாசி அணிக்கு உதவ கோலி தவறவில்லை. ஆனால் 5வது போட்டியில் தொடரை வெல்ல பேட்டிங்கில் கோலி அளித்த பங்களிப்பு 31 ரன்கள். இரு இன்னிங்சையும் சேர்த்து இவ்வளவு ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போல சரியும் வேளையில் தாங்கிப் பிடித்து சரிவை நிறுத்த வேண்டிய அவரும் சரிந்துபோக இந்தியாவின் தோல்விக்கான வாசல் திறக்கப்பட்டது.

4. கைகூடாமல் போன பார்ட்னர்ஷிப்கள்!

இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் சிம்பிளாக சொல்லிவிடலாம். ஜோ ரூட், பேர்ஸ்டோ இணை அமைத்த பார்ட்னர்ஷிப்தான். அந்த பார்ட்னர்ஷிப் 2வது இன்னிங்சில் இந்தியாவுக்கு அமையாமல் போனது தான் சோகம். புஜாரா தனியாளாக போராடிக் கொண்டிருந்தது அந்த பார்ட்னர்ஷிப்காக தான். ஆனால் பண்ட் வடிவில் அது கைகூடி வரும்போது புஜாரா பெவிலியன் திரும்பிவிட்டார். அடுத்து பண்ட்க்கு துணையாக யாரும் நிலைக்கவில்லை. விறுவிறுவென விக்கெட்டுகள் வீழ்ச்சியடைய, இந்தியாவும் வீழ்ச்சியடைந்து விட்டது.

5. நான்காவது இன்னிங்சில் எடுபடாமல் போன பவுலிங்:

4வது இன்னிங்சில் ஓப்பனர் க்ராவ்லே 46 ரன்களில் நடையைக் கட்டினார். ஒல்லி போப் டக் அவுட் ஆக, அதைத் தொடர்ந்து அலெக்ஸும் ரன் அவுட் ஆக இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ஒளி தெரிந்தது. ஆனால் அதை இருட்டடிப்பு செய்தது ஜோ ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி. நான்காவது நாளில் இணைந்த இந்த கூட்டணியை இறுதிவரை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை.

முதல் இன்னிங்சில் எடுபட்ட சிராஜின் பவுலிங்கில் விக்கெட் விழவில்லை. ஆனால் ரூட்- பேர்ஸ்டோ கூட்டணி ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்கும் அளவுக்கு மோசமாகி இருந்தது. இந்த இன்னிங்சில் இங்கிலாந்தின் ரன் ரேட் 4.93. கிட்டத்தட்ட ஒரு மெதுவான மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளாசப்படும் சராசரி ரன்ரேட். ஆனால் அதை டெஸ்ட் களத்தில் விளாசும் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் அந்த அணி பேட்டர்களுக்கு லட்டு போல அமைந்துவிட்டது.

ஒரு போனஸ் காரணம்!

முதல் இன்னிங்சில் இந்தியா ஆடும் போது, அடிக்கடி குறிப்பிட்டு இமாலய ஸ்கோரை எட்டவிடாமல் தடுத்த அதே மழை, 4வது இன்னிங்சில் இங்கிலாந்தின் வெற்றியை தடுக்க எட்டிக் கூட பார்க்கவில்லை. மழை வந்து ஆட்டம் நின்று டிரா ஆகியிருந்தால் தொடர் இந்தியா பக்கம் வந்திருக்கும். இதை இந்தியாவின் தவறாக சொல்ல முடியாது. ஆனால் இயற்கையின் விளையாட்டாக சொல்லலாம்.

மொத்தத்தில் கை மேலிருந்த வெற்றி வாய்ப்பை கூட்டுப் பிழைகளால் கோட்டை விட்டிருக்கிறது இந்தியா. அடுத்த போட்டிகளில் இதிலிருந்து பாடம் கற்று இந்தியா மீண்டெழும் என்று எதிர்பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com