இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதி வருகின்றன. லண்டனின் ஓவல் அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. சென்ற ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத கோலி, இன்று மீண்டும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக களமிறங்குகிறார்.
இங்கிலாந்து அணி முதல் போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவனுடன் களம் காண்கிறது. அந்த அணியில் ஓப்பனர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இருவரும் துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்த்ததால் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. இருப்பினும் ஹர்திக் பந்துவீச்சில் ஜேசன் ராய் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு வில்லனாக வந்தார் சஹால்.
அதிரடியாக விளையாடத் துவங்கிய பேர்ஸ்டோவை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார் சஹால். இதையடுத்து ஜோ ரூட், பென் ஸ்கோக்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி அளித்தார் சஹால். ஷமியும் தன்பங்குக்கு ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து தடுமாறத் துவங்கியது. 72-2 என்ற நிலையில் இருந்த அந்த அணி, அடுத்த 30 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இக்கட்டான நிலையில் இணை சேர்ந்த லிவிங்ஸ்டனும் மொயின் அலியும் பொறுப்புணர்ந்து நிதானமாக விளையாடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே இருவரும் எல்லைக் கோட்டுக்கு விரட்டியபடி கவனமாக விளையாடினார். லிவிங்ஸ்டன் 33 ரன்கள் குவித்த நிலையில் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுக்க, மொயினுடன் இணைந்தார் டேவிட் மில்லே. இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
47 ரன்கள் குவித்த நிலையில் மொயின் வெளியேற, டேவிட் 41 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இறுதியாக 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்களை குவித்தது. இனி 247 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட உள்ளது.