லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. எனவே, இன்று லார்ட்ஸில் நடைபெறும் போட்டி மூலம் இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாட்டிங்கம் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததாலும் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தவும் இந்திய அணியில் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றார். மேலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி தேர்வு குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. என்னினும் ஷர்துல் தாக்கூரும், ஜடேஜாவும் தங்கள் பணியை சிறப்பாகவே செய்தனர்.
இதனையடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட்டில் ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனையடுத்து இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இடம்பெற்றால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் காணும். மேலும் லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
இந்திய உத்தேச அணி: கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
இங்கிலாந்து உத்தேச அணி: ரோரி பர்ன்ஸ், டாமினிக் சிப்லே, சாக் கிராவ்லி, ஜோ ரூட், மொயின் அலி, ஜானி பார்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கரண், ராபின்சன், ஜிம்மி ஆண்டர்சன், மார்க் வுட்.